தமிழக மாணவர்கள், தமிழர்களால் தாழ்த்தப் படுவதை நினைத்தால், மனம் வேதனை அடைகிறது. தமிழகத்திலுள்ள, தனியார் பள்ளிகளில், குறிப்பாக, மெட்ரிக் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு பாடங்களை சரியாக நடத்தாமல், 10ம் வகுப்பு பாடத்தையே, இரண்டு ஆண்டு காலம் நடத்துகின்றனர். பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில், அதிக மதிப்பெண் வாங்க வைப்பதற்காக, ஒன்பதாம் வகுப்பு பாடப் பகுதிகளை நடத்தாமல் புறக்கணிக்கின்றனர்.
இதே போல், பிளஸ் 1 வகுப்பு பாடப் பகுதிகளை புறக்கணித்து விட்டு, பிளஸ் 2 வகுப்புப் பாடப் பகுதிகளை, இரண்டு ஆண்டு காலம் நடத்துகின்றனர். இதனால், மாணவர்கள், சொல்லொணா துயரம் அனுபவிக்கின்றனர். அஸ்திவாரம் சரியில்லாமல் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடம், அடியோடு சரிந்து விழும் நிலைக்கு, இந்த மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
ஐ.ஐ.டி., போன்ற படிப்புகளுக்காக, நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளிலும், அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளிலும், வங்கி வேலைகளுக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளிலும், சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும், கேட்கப்படும் வினாக்களை ஆய்வு செய்து பார்த்தால், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பாடப் பகுதிகளிலிருந்து தான்,
அதிகமான வினாக்கள் கேட்கப்படுகின்றன. 9 மற்றும் பிளஸ் 1 பாடத்தைப் படிக்கத் தவறிய தமிழக மாணவர்கள், இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், விழி பிதுங்கி நிற்க வேண்டிய இழி நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பள்ளிகள், லாப நோக்கில் நடத்தப்படுவதால், தங்களை முன்னிலைப்படுத்தி, விளம்பரம் செய்து கொள்ள, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தங்களுக்குப் பெருமை சேர்வதால், தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்வதில்லை. இந்த மோசடியில், மாணவர்கள் சிந்திக்கும் திறன் இழந்து, இழி நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே, 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில், அரசுப் பொதுத் தேர்வு நடத்தினால் தான், இந்த இழி நிலையைத் தடுக்க முடியும்.
இன்னொரு மாற்று வழியும் உண்டு. 10ம் வகுப்பு, அரசு பொதுத்தேர்வு வினாக்களில், 30 சதவீத வினாக்கள், ஒன்பதாம் வகுப்பு பாடப் பகுதியிலிருந்து கேட்க வேண்டும். அதே போல், பிளஸ் 2 வகுப்பு, அரசு பொதுத் தேர்வு வினாக்களில், 30 சதவீத வினாக்கள், பிளஸ் 1 வகுப்பு பாடப்பகுதியிலிருந்து கேட்க வேண்டும்.
இந்த முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தினால், மாணவர்கள் எந்த வகுப்புப் பாடத்தையும் விடாமல் படிப்பர். அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளிலும், நுழைவுத் தேர்வுகளிலும், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவர். இந்த முறைகளை நடைமுறைப்படுத்தி, தமிழக மாணவர்களை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்கு, தமிழக அரசும், கல்வித்துறையும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a comment