Labels

rp

Blogging Tips 2017

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' : பள்ளிகள் தோறும் மாணவர்களை சந்திக்க திட்டம்

அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உளவியல் நிபுணர்கள் மூலம், "மொபைல் கவுன்சிலிங்' வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
உளவியல் பாடம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் உட்பட சில பள்ளிகளில், சில நாட்களாக, "மொபைல் கவுன்சிலிங்' வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, அவரின் நேர்முக உதவியாளர் பிரேம் சாகர் மற்றும் கல்வி அதிகாரிகள் மேற் பார்வையில் முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில், கவுன்சிலிங் வழங்கி வரும், கோவையை சேர்ந்த உளவியல் டாக்டர் அருள் வடிவு கூறுகையில், ""மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெறுவது, அதற்கு தடையாக இருக்கும் அவர்களது தனிப்பட்ட பிரச்னைகளை மையமாக கொண்டு, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. எந்த வகுப்பில், எந்த மாணவன், படிப்பு, ஒழுக்கத்தில் சரியாக இல்லை என்பதை, தலைமையாசிரியர்கள் மூலம் அறிந்து, அந்த மாணவனிடம் தனிப்பட்ட முறையில் பேசி, அவர்களின் பிரச்னைகளை அறிந்து, தீர்வு காணப்படுகிறது. அதன் மூலம், அந்த மாணவன், மாணவியர் தெளிவு பெற்று தனது அன்றாட செயல்பாடுகள், படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படும்,'' என்றார்.
குடும்ப சூழ்நிலையால் குழப்பம்
இந்த கவுன்சிலிங்கில் பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிப்பட்டுள்ளன. அதில், "அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பத்து மாணவ, மாணவியரின், குடும்ப பின்னணி பரிதாபத்துக்குரியதாக உள்ளது. பெற்றோர் இல்லாததால், பிறரது ஆதரவில் வளர்வது, அதனால், பறிபோகும் அவர்களது அடிப்படை உரிமைகள்; பெற்றோரின் ஒற்றுமையின்மை; ஓயாத குடும்பச் சண்டை, அதனால், மாணவ, மாணவியருக்கு ஏற்படும் கவனச் சிதறல்; பெற்றோரின் ஊக்குவிப்பின்மை; தங்களது விருப்பத்துக்கு மாறாக, பெற்றோரின் கட்டாயத்தின் பேரில், ஒரு பள்ளி விட்டு வேறு பள்ளியில் இணைவது' உட்பட பல காரணங்கள் மாணவ, மாணவியரை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது.
மேலும், "குறிப்பிட்ட பாடத்தின் மீதான வெறுப்பு; அதை போதிக்கும் ஆசிரியர்கள் மீதான கடுப்பால், ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்து, அவர்களுக்கு கீழ் படியாமல் இருப்பது' போன்ற பிரச்னைகளும் உள்ளன. இவ்வாறான பிரச்னைகளில் சிக்கி, இருக்கும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது மனநிலையை மாற்றும் பயிற்சியும் வழங்கப்பட்டது. முடிவில், பெற்றோரை வரவழைத்து,"பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கை, பள்ளிகளில் அவர்களின் செயல்பாடுகளை, கண்காணிப்பதில் பெற்றோரும் பங்கெடுத்து கொள்ள வேண்டும்' என, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
வம்பை விலைக்கு வாங்கும் கோளாறுகள்...
வளர் இளம் பருவ கோளாறு, மாணவ, மாணவியர் பல வகைகளில் பாதிக்க செய்துள்ளது. "டிவி', சினிமாவால்,"டீன் ஏஜ்' மாணவர்கள், தங்களை ஒரு ஹீரோவாக பாவித்து, கீழ் படிதல், பொறுமை உட்பட பண்புகளை இழக்கின்றனர். எதிர்காலத்தில் ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ளாமல், பாக்கு போடுவது, புகைப் பிடிப்பது போன்ற தவறுகளை செய்து பார்க்க துணிகின்றனர் என்ற உண்மையும், கவுன்சிலிங் மூலம் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a comment