Labels

rp

Blogging Tips 2017

சத்துணவு ஊழியர்களின் கவலைகள்

சத்துணவு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் ஒருவர், கோவை அருகே நிராதரவாக தெருவில் இறந்து கிடந்ததாக அண்மையில் செய்தி வெளியானது. அப்போதுதான், லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு தினந்தோறும் உணவளிக்கும் இவர்களின் வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்பது பலருக்கும் தெரியவந்தது.
 தமிழகத்திலுள்ள சத்துணவு மைய ஊழியர்கள் சுமார் 97,000 பேர் தங்கள் ஊதியத்தை காலமுறைப்படுத்த வலியுறுத்திப் போராடி வருகின்றனர். தங்களுக்கு கெüரவமான ஓய்வூதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பதும் இவர்களது பல்லாண்டு காலக் கோரிக்கை.

 காமராஜர் முதல்வராக இருந்தபோது, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக மதிய உணவுத் திட்டத்தை 1955-இல் கொண்டுவந்தார். அந்தத் திட்டம் 1982-இல் சத்துணவுத் திட்டமாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆ.ரால் மாற்றம் பெற்றது. 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையங்கள் உருவாக்கப்பட்டன.
 தமிழகம் முழுவதும் சமூக நலத் துறையின் கீழ் 42,700 சத்துணவு மையங்கள் இயங்குகின்றன. இவற்றில் நாள்தோறும் சுமார் 55 லட்சம் ஏழை மாணவர்கள் பசியாறுகின்றனர். இதற்காக ஒவ்வொரு மையத்துக்கும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறாக, மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். 
 இவர்களில் பலர் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
 ஆரம்பத்தில் இவர்களின் ஊதியம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆயினும், அரசு சார்புப் பணி என்ற மயக்கத்தில் பலர் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால், 32 ஆண்டுகள் பணிபுரிந்தும் இவர்களின் ஊதியம் போதிய அளவு அதிகரிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. 
 சத்துணவு அமைப்பாளர்கள் அடிப்படை ஊதியம் ரூ.2,500 மற்றும் இதர படிகளுடன் பெறும் மாதாந்திர ஊதியம் அதிகபட்சம் ரூ.9,000 மட்டுமே. அதேபோல, சமையலர்கள் அதிகபட்சமாக ரூ.4,500-ம், உதவியாளர்கள் ரூ.3,500-ம் பெறுகின்றனர். இதுவும் சிறப்பு காலமுறை ஊதியமாகவே அளிக்கப்படுகிறது. 
 சத்துணவு ஊழியர்கள் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்தபோதும், பிற அரசு ஊழியர்கள் போலக் கருதப்படுவதில்லை. அவர்கள் பெறும் எந்தச் சலுகைகளையும் இவர்கள் பெற முடிவதில்லை. எனவே, தங்கள் ஊதியத்தை காலமுறை ஊதியமாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் கோருகின்றனர்.
 சத்துணவு விநியோகத்திலும்கூட பலத்த மாற்றங்கள் வந்துவிட்டன. முந்தைய உணவுமுறைக்கு மாறாக, பிரியாணி, கலவை சாதங்கள், முட்டை, சுண்டல், உருளைக்கிழங்கு உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. 
 அதாவது, சத்துணவு ஊழியர்களின் பணி அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது இவர்களின் மனக்குறை.
 சத்துணவு மையங்களில் பணியாற்றுபவர்கள் ஓய்வு பெற்றால் தற்போது கிடைப்பது ரூ.1,000 மட்டுமே. பகுதிநேர அரசுப் பணியாளர்களாகக் கருதப்படும் இவர்களின் ஓய்வூதியம் முதிய வயதில் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ போதுமானதாக இல்லை. 
 தமிழகத்தில் சமூக நலத் திட்டங்களில் பலருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. முதியோர், முதிர்கன்னிகள், முதிர்ந்த சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கு மாதந்தோறும் அரசு ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்குகிறது. இது அரசின் கடமை என்ற அளவில் வரவேற்புக்குரியதே. 
 அதேசமயம், 32 ஆண்டுகள் அரசு சார்ந்த பணியில் ஈடுபடும் சத்துணவு ஊழியர்களும் அதே அளவு ஓய்வூதியம் பெறுவதென்பது, அவர்கள் செய்யும் பணிக்கே கெüரவக் குறைவாகத்தான் கருதப்படும்.
 அவர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்குமாறு கோரி வருகிறார்கள். இப்போது வழங்கப்படும் ரூ.1,000 ஓய்வூதியமும்கூட மூன்று மாதங்கள் கழித்து கிடைக்கும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது.
 ஒரு நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரியும் எந்த ஊழியருக்கும் ஓய்வின்போது பணிக்கொடை பெறும் உரிமை உள்ளது. பொதுவான அரசு விதிமுறையின்படி ஊழியரின் 16 மாத ஊதியம் கணக்கிடப்பட்டு பணிக்கொடையாக வழங்கப்பட வேண்டும். இதிலும் சத்துணவு ஊழியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். 
 அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியிருந்தால் தற்போதைய ஊதியத்தின்படி அவர்கள் குறைந்தபட்சம் ரூ.1.42 லட்சம் பணிக்கொடை பெற வேண்டும். ஆனால், அவர்கள் பெறுவது ரூ.50,000 மட்டுமே.
 சுமார் 1.27 லட்சம் பேர் பணிபுரிய வேண்டிய சத்துணவு மையங்களில் இப்போது பணியாற்றுவோர் சுமார் 97,000 பேர் மட்டுமே. 
 அதாவது, நிரப்பப்படாத காலிப் பணியிடங்களால் ஏற்படும் பணிச் சுமையை இப்போதுள்ள ஊழியர்கள்தான் சுமக்கின்றனர். இந்தக் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை.
 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா. எனவே, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறிவிடும் என்று அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆயினும், அவர்களின் கனவுகள் இதுவரை நனவாகவில்லை. 
 நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கும் என்று காத்திருந்த சத்துணவு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 
 அ.தி.மு.க. அரசின் பதவிக் காலத்துக்குள் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், தாங்கள் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் வீணாகி விடுமோ என்ற கவலையில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர்.
 தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களை வாழ வைப்பார் என்ற நம்பிக்கையில் சத்துணவு ஊழியர்கள் இப்போதும் காத்திருக்கின்றனர். அரசு சார்ந்த பணியில் உழைத்துக் களைத்த இவர்கள் மீது முதல்வரின் கருணைக் கண் பார்வை விழுமா? 
 சத்துணவுக்காக தட்டின் முன் ஆவலுடன் அமர்ந்திருக்கும் பள்ளிக் குழந்தைகள் போலவே, அதை சமைத்துப் பரிமாறும் ஊழியர்களும் இப்போது காத்திருக்கின்றனர்.

No comments:

Post a comment