தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

↑ Grab this Headline Animator

மருத்துவ கல்வி; தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த திட்டம்

புதுடில்லி: மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும், மருத்துவ, சீட்டை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதை தடுக்கவும், நாடு முழுவதுக்கும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தவும்; மருத்துவ பட்டப்படிப்பை முடிப்பவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தவும்மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மருத்துவக் கல்வி வியாபாரமாவதைத் தடுக்கவும், பல்வேறு தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நன்கொடை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வாங்குவதை தடுக்கவும், மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும் ஆலோசனைகளை வழங்க, பார்லிமென்ட் குழு ஆய்வு செய்தது.இந்த குழுவினர், தமிழகத்தின் ஊட்டி, கோயம்புத்துார் உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவ பல்கலைகளில் ஆய்வு செய்தனர்.


அறிக்கை தாக்கல்:

பல்வேறு மருத்துவ நிபுணர் கள், கல்வி நிபுணர்கள், அரசுஉயரதிகாரிகள், பெற்றோர், மாணவர்கள், கல்லுாரிகளின் பிரதிநிதி கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி, 126 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, இந்த பார்லிமென்ட் குழு தாக்கல் செய்தது. இந்த பரிந்துரைகள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்காக, தேசிய அளவில் ஒரே ஒரு நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதேபோல் சிலர், பணம் கொடுத்து மருத்துவக் கல்லுாரி யில் சேர்ந்து விடுகின்றனர். 

இவர்களுக்கு, மருத்துவ தொழிலை மேற்கொள்ளும் தகுதி இருப்பதில்லை. இவர்கள், மருத்துவ தொழில் செய்வதை தடுக்கும் வகையில், மருத்துவப் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்துவதை அமல்படுத்த வும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மத்திய அரசு தீவிரம்:

இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதை விரைவுபடுத்தி இந்தபரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முழு முனைப்புடன் உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆண்டுக்கு 55 ஆயிரம் பேர்:

உலகிலேயே அதிக அளவிலான மருத்துவ பட்டதாரிகள், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தயாராகின்றனர். சராசரியாக, 400 மருத்துவக் கல்லுாரிகளில், ஆண்டுக்கு, 55 ஆயிரம் பேர், எம்.பி.பி.எஸ்., முடித்து வெளியேறுகின்றனர். அதேபோல், 25 ஆயிரம் பேர் முதுகலை பட்டத்தை முடிக்கின்றனர்.

கோர்ட்டில்வழக்கு:

இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையின் படி, தேசிய அளவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்த, சுகாதார துறை முயற்சியை மேற்கொண்டது.இது தொடர்பாக, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் தொடர்ந்த வழக்கில், அரசின் இந்த முயற்சிக்கு சுப்ரீம் கோர்ட், 2013ல் தடை விதித்தது. 

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், நீதிபதிகள் அல்தமாஸ் கபீர், விக்ரம்ஜித் சென் ஆகியோர் தடை விதித்த அதே நேரத்தில், மற்றொரு நீதிபதியான அனில் தவே, அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால்,இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது.

ரொம்ப மோசம்:

பார்லிமென்ட் குழு மேற்கொண்ட ஆய்வில், பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பார்லிமென்ட் குழு, அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  • மருத்துவக் கல்வியில், பயிற்சியே மிகவும் முக்கியம். ஆனால் தற்போதைய கல்வி முறையில், இதற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. மருத்துவ பட்டப் படிப்பை முடிக்கும் பலருக்கும், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை வெளியே எடுப்பது, காயங்களுக்கு தையல் போடுவது போன்ற அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் கூட தெரியவில்லை.
  • பட்டப்படிப்பை முடித்தவுடன், இன்டர்ன்ஷிப் எனப்படும், நேரடி தொழில் பயிற்சி பெற வேண்டும். ஆனால் பெரும்பாலானோர், மேற்படிப்பு படிப்பதற்கு தயார் செய்வதற்கு, அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
  • தனியார் கல்லுாரிகளில், 50 லட்சம் ரூபாய் வரை, டொனேஷனாக பெறப்படுகிறது. கல்லுாரியின் தரத்துக்கு ஏற்ப, இது சில இடங்களில் அதிகமாக வும் உள்ளது.
  • இதனால் பணம் இல்லாத, உண்மையில் நல்ல திறமையுள்ள, ஆர்வமுள்ள மாணவர்கள், மருத்துவ துறைக்கு வர முடிவதில்லை.
  • தமிழகத்தின் ஊட்டி, கோவை, கர்நாடகத்தின் பெங்களூரு போன்ற நகரங்களில் சோதனை செய்தோம். பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில், பல்கலைகளில் தனித்தனியாக தேர்வுகள் நடைபெறுவதால், மருத்துவர்களுக்கு என பொதுவான தகுதிகள் இல்லை என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது.
  • மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், திறமை வாய்ந்தவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கவும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

web stats

web stats