Labels

rp

Blogging Tips 2017

உதயச்சந்திரன் மாற்றப்பட்டால் அது, கல்வித்துறைக்குப் பேரிழப்பு....விகடன் சர்வே ரிசல்ட்

தமிழகப் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் மாற்றப்படப் போவதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்வதையெல்லாம் உதயச்சந்திரன் கேட்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நேர்மையாகச் செயல்படும் உதயச்சந்திரனுக்கு அழுத்தம் கொடுப்பது தவறு என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விவாதம் நடத்த வருமாறு அன்புமணி ராமதாஸ், செங்கோட்டையனுக்குச் சவால் விடுத்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் 1620 பேர் பங்கேற்று வாக்களித்துள்ளனர்
.உதயச்சந்திரன் செய்தது சரி
அரசு துறைகளில் திறம்படச் செயல்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவது சரி எனக் கருதுகிறீர்களா? என்று கேட்டிருந்தோம். அதற்கு 97.4 சதவிகிதம் பேர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவது தவறானது என்று கூறியுள்ளனர்.
அதேபோல, பள்ளிக்கல்வித் துறையில் உதயச்சந்திரன் மேற்கொண்ட புதிய நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதா? என்று கேட்டிருந்தோம். அதற்கு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்று 97.7 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அமைச்சர்கள் தங்கள் பகடைக்காயாகப் பயன்படுத்துவது சரியா? என்ற கேள்விக்கு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார்கள்.
தமிழகத்தின் தலைவிதி
நான்காவதாக, கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் என்று கேட்டிருந்தோம். அதற்கு, கருத்துத் தெரிவித்த பெரும்பாலானவர்கள் உதயச்சந்திரனைப் பாராட்டி கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
"நேர்மையான அதிகாரி, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார். எனவே, மாற்றக்கூடாது" என்று ஒருவர் கூறி உள்ளார். இன்னொருவர், "மாற்றங்கள் எப்போதாவதுதான் யாரோ ஒருவரால் நிகழ்கிறது. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் இவர்" என்று கூறியுள்ளார்.
அவர் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார். இவரால் அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் இழப்பு ஏற்படுவதால் (especially he removed SSLC,+2 ranking system) இவரை மாற்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று ஒருவர் கூறியுள்ளார். "நேர்மையான முறையில் பணியாற்றுகிறார்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரம் உயர்த்தி நீட் தேர்வுக்குத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்த நினைக்கிறார். இது மிக நல்ல முன்னேற்றமாகும்." என்று இன்னொருவர் தெரிவித்துள்ளார்.
"நீண்ட நாள்களுக்குப் பின் தமிழகக் கல்வித்துறையில் சில மாற்றங்களுக்கான முயற்சியாவது நடைபெறுகிறது. அது வெற்றி பெறுமா? நல்லதா என்பதைவிட முயற்சியாவது நடைபெறுகிறது என்பதே நல்ல மாற்றங்களுக்கான அடையாளமாகவே காண்கிறேன்" என்று ஒரு வாசகர் சொல்லியிருக்கிறார். "அரசியல்வாதிகளின் தவறான செயல்பாடுகள் நல்ல அலுவலர்களைச் சீராகப் பணிபுரிய விடுவதில்லை. இது தமிழகத்தின் தலைவிதி" என்றும் கருத்துச் சொல்லி இருக்கின்றனர். .
டி.என்.பி.எஸ்.சி-யில் சீர்திருத்தம் செய்தவர்
"இலக்கிய ரசனை உள்ளவர். தமிழ் நாட்டில் படித்ததால் இங்கு உள்ள நிறை,குறைகளை அறிந்தவர். எளிமையானவர்" என்றும், "இவரால்தான் தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் எனது மகனுக்கு வீட்டுக்கு அருகாமையால் உள்ள பள்ளியில் இடம் கிடைத்தது. அதற்கு இவர்தான் காரணம். ஏனெனில், இவர்தான் online மூலம் விண்ணப்பிக்கும் முறையைக் கொண்டு வந்தார். இது போன்ற நேர்மையான, திறமையான அதிகாரிகளை மாற்றக்கூடாது. இது என்னைப் போன்ற பெற்றோர்களின் கருத்து"என்றும் வாசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். .
"சிறந்த நிர்வாகி மதுரை collector ஆக சிறப்பான நிர்வாகத்தை அளித்தார். மிகவும் நேர்மையானவர் தற்பொழுது கல்வித் துறையில் சிறப்பான மாற்றங்களைச் செய்து சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார். அவரது சிறப்பான பணி கல்வித்துறையில் தொடரவேண்டும். சரியான நபரிடம் சரியான துறை இருக்கிறது. இவரை மாற்றினால் இழப்பு தமிழகத்துக்குதான். தமிழக கல்வித்துறைக்கே பெரிய இழப்புதான்" என்று ஒரு வாசகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"டி.என்.பி.எஸ்.சி-யில் இருக்கும் போது ஊழலையும், ஊழல் செய்யும் வழிகளையும் அடைத்துத் தேர்வில் வென்றால் லஞ்சம் இல்லாமல் அரசு ஊழியர் ஆகிவிடலாம் என்று வழி செய்தவர். கடைசியாக நேர்கானல் அறையில் CCTV வைக்க முயற்சி செய்யும் போது, வேறு ஒரு துறைக்குத் தூக்கியடிக்க பட்டவர்" என்று அவரது நேர்மையை ஒரு வாசகர் நினைவு கூர்ந்துள்ளார்.
"அனைத்து ஆசிரியர்களிடம் பொறுமையாகக் கருத்துகளைக் கேட்டு , பள்ளி அளவில் இருக்கும் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றையெல்லாம் தீர்க்கும் விதமாக மாற்றங்களை விதைத்ததுதான் முக்கியமான விஷயம். தொடக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரை கருத்துகளைக் கேட்டறிந்து செயலில் மாற்றங்களைப் புகுத்திய சிந்தனையாளர். கல்வித்துறை சிறக்க இவரின் சிந்தனைகள் அவசியம்" என்று முத்தாய்ப்பாக ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment