Tuesday, 17 September 2013

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள் சர்வேயில் அதிர்ச்சி தகவல் /தினகரன்-17.09.2013/


தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் இவர்களை விடுவித்தாலும், திரும்பவும் வேலைக்கு செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்த கூடாது. இவர்களை பணியில் ஈடுபடுத்தும் நிறுவன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மெக்கானிக் ஷாப்புகள், மளிகை கடைகள், குளிர்பான நிறுவனங்கள், ஓட்டல்கள், நடமாடும் தள்ளு வண்டி கடைகள் போன்றவற்றில் குழந்தை தொழிலாளர்களை பல உரிமையாளர்கள் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த சம்பளமே கொடுத்தால் போதும் என்பதால் பலர், சட்டம் குறித்து கவலைப்படாமல் உள்ளனர். பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள், படிப்பு சரியாக வராத மாணவர்கள், வீட்டில் படிப்பதற்கான சூழ்நிலை இல்லாதவர்கள் சிறு வயதிலேயே வேலைக்கு சேர்ந்து பணத்தை பார்த்ததும் படிக்கும் எண்ணம் இல்லாமல் அதே சூழலில் சிக்கி விடுகின்றனர். இவர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அடை யாளம் கண்டு மீட்டு பள்ளி யில் சேர்க்கிறது. என்றாலும் திரும்பவும் வேலைக்கு வந்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் வருங்காலத்தில் நல்ல குழந்தைகளாக மாறும் வாய்ப்பு குறைகிறது. இந்த அவலநிலையை தடுக்க நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தர்மபுரிக்கு முதலிடம்; கடலூரில் குறைவு

சென்னை மாவட்டத்தில் நடப்பாண்டில் 4,799 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,724 பேர் ஆண்கள், 2,075 பேர் பெண்கள். இதில் 484 குழந்தைகள் அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 4,315 பேர் ஓட்டல், மெக்கானிக் ஷாப், ரெடிமேட் கடை, தள்ளுவண்டி வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோவை மாவட்டத்தில் 2,573 பேர். பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, திருப்பூர், மடத்துக்குளம், பல்லடம் ஆகிய நகரங்களில் அதிகளவில் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 1,469 பேர் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் 95 பேர். அண்ணாகிராமம், கீரப்பாளையம், குமராட்சி, மேல் புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 10,125 பேர். இவர்களில் ஆண்கள் 6,622, பெண்கள் 3,503. ஓசூர், பர்கூர், தர்மபுரி, அரூர், காரிமங்கலம், மத்தூர், நல்லாம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, தளி, காவேரிப்பட்டினம் போன்ற இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 5,616 பேர். இவர்களில் பெரும்பாலானோர் பிச்சை எடுத்தல், கூலி வேலை, ஆடுமேய்த்தல், மாடு மேய்த்தல், தெரு வியாபாரத்தில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.ஈரோடு மாவட்டத்தில் 2,243 பேர். இவர்கள் பவானி, தாராபுரம், ஈரோடு, கோபி, மொடக்குறிச்சி, சத்திமங்கலம், ஊத்துக்குளி போன்ற இடங்களில் பணியாற்றி மீட்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 822 பேர். இவர்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழிலில் உதவியாளர்களாக இருந்தனர். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,071 குழந்தை தொழிலாளர்கள். கரூர், குளித்தலை, தோகைமலை, அரவாக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், போன்ற பகுதிகளில் குறைந்தது 9 வயதுடைய சிறுவர்களும் பணியாற்றினர்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 132 பேர்தான் குழந்தை தொழிலாளர்கள். இவர்களும் கட்டுமான இடங்களில் பணியாற்றினர்.

நாகை மாவட்டத்தில் 864 பேர் குழந்தை தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி உதவியாளர்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 96 பேர் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 140 பேர். நீலகிரி மாவட்டத்தில் 164 பேர். விழுப்புரம் மாவட்டத்தில் 252 பேர், தஞ்சையில் 358 பேர், திருவாரூரில் 460, புதுக்கோட்டையில் 382, ராமநாதபுரத்தில் 937 பேர், சேலத்தில் 7,947 பேர், தேனியில் 1,683 பேர் திருச்சியில் 866 பேர், நெல்லையில் 4,453 பேர், தூத்துக்குடியில் 2,655 பேர், வேலூரில் 4,204 பேர், திருவள்ளூரில் 1,153 பேர், விருதுநகரில் 6,838 பேர், திருவண்ணாமலையில் 1,427 பேர், நாமக்கல் மாவட்டத்தில் 3,229 பேர், காஞ்சிபுரத்தில் 3,417 பேர் என்ற அந்தந்த மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats