Labels

rp

Blogging Tips 2017

தேசிய கல்வி தினம்: அபுல் கலாம் ஆசாத்தை நினைவு கூர்வோம்

இந்தியாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், கல்வி துறை அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளையே, ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மௌலானா கைருதுனுக்கும், அலியாவுக்கு மகனாக பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத். அவரது கல்வியறிவை கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் கற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்தார்.
சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.
வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.
"மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள்" என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத். அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார்.
தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐஐடி.,க்கள் அமைக்கப்பட்டன. 1955ல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.
நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை...ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்றார். நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழி நடத்திச் சென்றார்.
அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆசாத். 14வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.
மெளலானா அபுல் கலாம் ஆசாத் தனது 69ம் வயதில் தில்லியில் காலமானார். இந்திய‌ நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" இவரது மறைவுக்கு பின் 1992ல் வழங்கப் பட்டது.!

No comments:

Post a comment