தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை
பள்ளிகளில், நாள் ஒன்றுக்கு 72 ஆவணங்களை கட்டாயம் கையாள வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டுள்ளதால், பள்ளித் தலைமையாசிரியர்களின் பணிச்சுமை மூச்சு முட்டும்
அளவிற்கு அதிகரித்து வருகின்றன.
பள்ளிக் கல்வித் துறையில் கற்றல் கற்பித்தல்
பணிகளை கண்காணிக்கும் முக்கிய பொறுப்பு, அந்தந்த பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கு உண்டு. கண்காணிப்பு பணியில் அதிக கவனம் இருந்தால்
தான் பள்ளிகள் செயல்பாடு, மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும்.
பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் உறவு, பள்ளி மற்றும் பொதுமக்கள் நல்லுறவு,
அவ்வப்போது அவசரமாக அதிகாரிகள் கேட்கும் புள்ளிவிவரங்கள்... என பல
பணிகளுக்கு இடையே, நாள் ஒன்றுக்கு 72 வகை ஆவணங்களை பராமரித்து, அதற்கான
பதில்கள் அனுப்ப வேண்டியுள்ளதால், பள்ளிச் செயல்பாடுகளை கண்காணிப்பது
சவாலாக மாறி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. நாள் ஒன்றுக்கு, ஆசிரியர்கள்,
மாணவர்கள், அலுவலர்கள் வருகை பதிவேடுகள், கல்வி உதவித் தொகை, நூலகம்
விவரம், ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் முன்பணம், சி.எல்., மற்றும் மருத்துவ
விடுப்புகள், சேமநல நிதி கணக்கு, பள்ளி ஆய்வுப் பணிகள், அனைவருக்கும்
இடைநிலை கல்வி, அனைவருக்கும் கல்வி, கருவூலம் கணக்குகள் பதிவேடு,
ஆசிரியர்கள் இயக்கப் பதிவேடு, தன் பதிவேடு, தளவாட பொருட்கள் இருப்பு என
பல்வேறு பொறுப்புகள் தொடர்பாக, 72 ஆவணங்களை ஒரு தலைமையாசிரியர் கையாள
வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர, அரசு அறிவித்துள்ள 14 வகையான மாணவர்
நலத் திட்டங்கள் தொடர்பான பொருட்கள் வினியோகம், புள்ளி விவரங்களை "அப்டேட்'
செய்து, அதற்கான ஆவணங்களையும் பராமரிக்க வேண்டும்.
இதுபோன்று அதிகரிக்கும் பணிப்பளுவால் கற்றல்
கற்பித்தல் மற்றும் கண்காணிப்பு பணி அதிகம் பாதித்துள்ளது. பலர் மனரீதியான
பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளதாவும் சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை உயர்நிலை மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் கழக நிர்வாகிகள் கிறிஸ்டோபர் ஜெயசீலன், நவநீதகிருஷ்ணன்
கூறியதாவது: பள்ளியில் எது நடந்தாலும் தலைமையாசிரியர்கள் தான் பொறுப்பு
ஏற்க வேண்டும். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) நடக்கும்
கட்டடப் பணிகளை கூட, "அனுபவமே' இல்லாத தலைமையாசிரியர் தான் கண்காணிக்க
வேண்டியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 சதவிகிதம் சந்தா தொகை
பிடித்தம் செய்து, சென்னை ஏ.ஜி., அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதுதான்
எங்கள் பொறுப்பு. ஆனால், பதிவாகாமல் விடுபடும் பிரச்னைகளுக்கு நாங்கள்
பொறுப்பு ஏற்க முடியாது. பள்ளிகளில் ஏற்கனவே உதவியாளர், வாட்ச்மேன்,
கிளர்க், கணினி ஊழியர்கள், சுகாதார பணியாளர் என பல பணியிடங்கள் காலியாக
உள்ளன. ஆனாலும், பள்ளி செயல்பாடு பாதிக்காமல் 72 "பைல்'களையும் கையாள
வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்றனர்.
No comments:
Post a comment