ஆர்.டி.இ., சட்டம் அரசுக்கு 'பூமாராங்'காக மாறியுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறையும் அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.ஏழை குடும்பத்தின் பிள்ளைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும். பணமில்லாததால், கல்வி பெறுவதிலிருந்து வஞ்சிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன், கட்டாய கல்வி உரிமை சட்டம் - ஆர்.டி.இ., சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
இச்சட்டத்தின் கீழ், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், தனியார் பள்ளிகளில், 25 சீட்கள் வழங்குவது கட்டாய மாக்கப்பட்டது. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசே செலுத்துகிறது.
ஆர்.டி.இ., சட்டம் அமலுக்கு வந்த பின், அரசு பள்ளிகளுக்கு பதிலாக, தனியார் பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க, பெரும்பாலான பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளை, ஆங்கில மோகத்தால், தனியார் பள்ளிகளுக்கு மாற்றிக்கொள்கின்றனர். இதனால் அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கிடுகிடு என உயர்கிறது.
அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், மாணவர் சேர்க்கையில் பின்னடைவை சந்தித்துள்ளன. நடப்பு கல்வியாண்டில், 85 ஆயிரம் மாணவர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.