Labels

rp

Blogging Tips 2017

மழை நீர் சேமிப்பு வாரம் பள்ளிகளில் இன்று துவக்கம்


மாநிலம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் இரண்டு மரக்கன்றுகள் நட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.

மழை நீர் சேமிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பை, இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிகளில், சுற்றுச்சூழல் சங்க மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தவும். ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி அதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு வாரத்தின் இறுதி நாளில், பரிசுகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுகுறித்து சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு இரண்டு மரக்கன்றுகள் கட்டாயம் நடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் 500 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.


இது தவிர, மாணவர்களுக்கு ஒரு மரக்கன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு பள்ளிகளிலும், மாணவர்களின் எண்ணிக்கை, மரக்கன்று வளர்க்க விருப்பமுள்ள மாணவர்கள், அம்மரக்கன்று மாணவர்கள் எங்கு நடவுள்ளனர், பராமரிப்பு போன்ற விபரங்களை கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "பள்ளிக்கு இரண்டு மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும், மாணவர்களுக்கு ஓர் மரக்கன்று என்ற திட்டத்தில், பள்ளிகளில் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்ததும் மாணவர்களுக்கு ஒரு மரக்கன்று வழங்கி அவர்களின் குடியிருப்பு பகுதிகளில் நட திட்டமிட்டுள்ளோம். மரக்கன்றுகள் நடுவது மட்டுமில்லாமல், மாணவர்களால் பராமரிப்பும் கண்காணிக்கப்பட உள்ளது" என்றார்.

No comments:

Post a comment