Labels

rp

Blogging Tips 2017

வேலை பளுவின் ஊடாக புத்துணர்வு பெற...

ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது, தங்களின் செயல்பாடுகளில் சலிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதுபோன்ற நேரங்களில் ஒரு புதிய புத்துணர்வைப் பெற வேண்டிய தேவை எழுகிறது. ஏனெனில், அதன்மூலமாகவே, நாம் மீண்டும் நமது வேலையில் ஈடுபாட்டுடன், மறுபடியும் இறங்க முடியும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், தேர்வுக்கு படிக்கும் நேரத்தில், பாடங்களின் எண்ணிக்கை மற்றும் படிக்க வேண்டிய அம்சங்களை நினைக்கும்போது, உங்களுக்கு மலைப்பும், சலிப்பும் ஏற்படலாம். இவ்வளவையும் நாம் எப்போது நிறைவு செய்யப் போகிறோம் என்பதை நினைக்கையில், நீங்கள் உண்மையிலேயே மிரட்சி அடைவீர்கள்.

முதலில், அதிக ஆர்வத்துடன் நாம் படிக்க அமருவோம். ஆனால், சில மணிநேரங்கள் சென்றதும், நமக்கு சோர்வும், சலிப்பும் ஏற்பட்டுவிடும். அப்புறம்தான் நாம் உணர்வோம், இடையிடையே சிறிதுநேரம் ஓய்வும், புத்துணர்வும் பெற்றால், நம்மால் பெரிய வேலையை வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடியும் என்பதை.

சிலருக்கு, அலுவலகத்தில், சில நாட்களில் மிக அதிக வேலைபளு இருக்கும். யாரேனும் ஒரு சக ஊழியர் விடுப்பு எடுத்துவிட்டாலோ அல்லது ஒரு புதிய காரணத்திற்காகவோ, இந்த வேலை பளு இருக்கலாம். அந்த சமயத்தில், நாம் மிகவும் சோர்வாகவும், மன எரிச்சலாகவும், மலைப்பாகவும் உணர்வோம். எனவே, தேவையான நேரங்களில் இடைவெளிகள் எடுத்துக்கொண்டு, கவனத்தை சற்று திசை திருப்பி, மூளையை ஆசுவாசப்படுத்துதல் முக்கியம்.

இதுதொடர்பான ஒரு விரிவான அலசலை இக்கட்டுரை மேற்கொள்கிறது.
உரையாடல்
நீங்கள் அலுவலக வேளையினூடே இடைவெளி எடுத்துக்கொள்ளும் சிறிது நேரத்தில், சக பணியாளருடன் சிறிதுநேரம் பொது விஷயங்களைப் பற்றி பேசலாம். அந்தப் பேச்சானது, விவாதமாகவோ, கிசுகிசுவாகவோ அல்லது நீண்ட உரையாடலாகவோ இருக்கக்கூடாது. மாறாக, சினிமா, அரசியல், விளையாட்டு என்று சில விஷயங்களை லேசாக பேசிக் கொள்ளலாம்.

சக பணியாளர் வேலையாக இருந்தால், போன் மூலம் உங்களின் ஏதேனுமொரு நண்பரிடமாவது பேசலாம். ஆனால், இதில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பேசக்கூடிய நபர், அந்த சமயத்தில் ஏதேனும் முக்கியமான வேலையில் இல்லாமல் இருப்பதை கவனித்தல் அவசியம். இந்த சிறிய உரையாடலின் மூலமாக, உங்களின் மூளைக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

சிறிய தூக்கம்

இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்குமா? என்பது சந்தேகமே. அதேசமயம், வாய்ப்பு கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். பொதுவாக, மதிய நேரங்களில், பலருக்கு தூக்கத்தின் தாக்குதலிலிருந்து விடுபடுவது அவ்வளவு லேசான காரியமாக இருக்காது. வாய்ப்பு கிடைப்பவர்கள், ஒரு 30 நிமிடம் அல்லது 20 நிமிடங்கள், குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால், அது சிறப்பான புத்துணர்ச்சியைத் தரும். அதற்கடுத்து, நமது பணியை மாலைவரை, புதிய சக்தியுடன் மேற்கொள்ளலாம்.

தேநீர் இடைவேளை

இந்த இடைவேளை இல்லாத அலுவலகமே இல்லை எனலாம். இடைவேளைகளில், தேநீர் அல்லது காபி எடுத்துக்கொள்வது உங்களின் மூளையை சுறுசுறுப்பாக்குவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும், அந்த பானங்களை பருகும் நபர்களின் குழு, அதைப் பருகாத நபர்களின் குழுவைவிட, சிறப்பான முறையில் செயல்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


காபியில், caffeine என்ற ஒரு பொருள் கலந்திருக்கிறது. இது மனிதனை தன்பால் அடிமையாக்கும் சக்தி கொண்டதாம். இந்த caffeine, ஒருவருக்கு பணியின்போது ஏற்படும், கழுத்து, தோள்பட்டை மற்றும் மணிக்கட்டு வலியை, தற்காலிகமாக போக்குவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இடைவேளை நேரத்தில் தேநீர் அல்லது காபி அருந்துவதில் தவறில்லை.


அதேசமயம், குறிப்பாக, காபி போன்ற பானங்களை மிக அதிகளவு அருந்தி, உடல்நலனை கெடுத்துக் கொள்ளாமல், அதை அளவோடு அருந்தி வளம் பெறவும்.


சிறிது நடக்கலாம்


வேலையின்போது, சலிப்பும், அலுப்பும் ஏற்பட்டால், சிறிதுநேரம் நடத்தல், சிறப்பான புத்துணர்ச்சியைத் தரும். நடத்தலின் மூலம் சிறிய மூளை செல்கள் நல்ல உற்சாகம் பெறுமாம். நடத்தலின் மூலம் உங்களின் மனநிலை மாறி, நீங்கள் அலுப்பிலிருந்தும் விடுபடுவீர்கள்.


நடத்தலை அலுவலக வளாகத்திற்குள்ளோ அல்லது அலுவலகத்திற்கு வெளியே சற்றுதூரம் செல்வதின் மூலமோ மேற்கொள்ளலாம். தேவையின்றி அதிகநேரம் நடக்காமல், உங்களின் உடல் தயார்நிலைக்கு வந்ததும், பணிக்குத் திரும்பி விடுங்கள்.


வலைதளங்களுக்கு செல்லுதல்


பணியில் ஒரேயடியாக மூழ்கி, மனஅழுத்தம் ஏற்படும்போது, செய்தி வலைதளங்களுக்கு சென்று, வெளியுலக செய்திகளை படித்து புத்துணர்ச்சியை வரவழைத்துக் கொள்ளலாம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, பல செய்தி வலைதளங்கள் உள்ளன.


மேலும், metacafe போன்றவற்றுக்கு சென்று, சற்றுநேரம் செலவழித்து மூளைக்கு உற்சாகத்தை தரலாம். அதுமட்டுமின்றி, உங்களுக்குப் பிடித்த வலைப் பக்கங்களுக்கு சென்று படித்தும், மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். எதை செய்தாலும், அலுவலக விதிமுறைகளின்படியே செயல்படவும். ஏனெனில், சில அலுவலகங்களில், சில வசதிகளை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கலாம்.


விளையாட்டு அம்சங்கள்


சில அலுவலகங்களில், Recreation Room என்று ஒரு தனியிடமே இருக்கும். அங்கே, Carrom board, Shuttle cock மற்றும் Chess உள்ளிட்ட பல விளையாட்டு வசதிகள் இருக்கும். எனவே, உங்களுக்கு தேவையான நேரத்தில், அங்கே சென்று, பிடித்த விளையாட்டில் கவனம் செலுத்தலாம். இதுதவிர, தொலைக்காட்சி வசதியும் சில அலுவலகங்களில் செய்யப்பட்டிருக்கும். அங்கு சென்றும், சிறிதுநேரம் அவற்றைப் பார்த்து உங்களின் கவனத்தை திசை திருப்பலாம்.


இதை கவனத்தில் கொள்ளவும்


இடைவேளை நேரங்களில் தேநீர் மற்றும் காபி அருந்த செல்லும்போதோ, அல்லது Recreation அறையில் விளையாடும்போதோ, உங்களுக்கு அந்த நேரத்தில் பரிபூரண சுதந்திரம் உள்ளது என்று நினைத்துவிடக்கூடாது. அந்த நேரத்தில் உங்களின் மேலதிகாரியிடமிருந்து, ஒரு அவசர வேலைக்கான அழைப்பு வரலாம். அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துதான் ஆக வேண்டும்.

No comments:

Post a comment