பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித்
துறைக்குத் தேர்வு பெற்ற 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12
ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) பணியில்
சேருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72
ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மதிப்பெண் முறையின்
மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 10,698 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 1,649
பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு
செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,
ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண்
முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு
பணி நியமனம் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்திருந்தது.
எனினும், அவர்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய தடையில்லை என
அறிவித்தது.
இந்த நிலையில், தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு
எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு
தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்தத்
தடையை புதன்கிழமை நீக்கியது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் பணி நியமனக்
கலந்தாய்வு நடைபெற்ற இடங்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களுக்கான பணி
நியமன உத்தரவைப் பெற்றுச் சென்றனர். இந்த ஆசிரியர்கள் அனைவரும் தங்களது
பணியிடங்களில் வெள்ளிக்கிழமையன்றே சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a comment