Labels

rp

Blogging Tips 2017

நீண்ட உறக்கம் கலைகிறது - மக்களுக்கு நல்ல காலம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, 100 நாட்கள் முடிந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 7 சதவீதம்அதிகரிக்கப்பட்டது. இது எல்லா அரசும் மேற்கொள்ளும் விஷயம் என்று ஒதுக்கினாலும், மத்திய அரசு ஊழியர்கள் பணி விஷயத்தில், அதிக கெடுபிடிகள் வந்து விட்டன. மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலகத்தில் அதிவேகமாக செயல்பட ஆரம்பித்தால், ஓராண்டில் அரசு நிர்வாகத்தின் வேகம் குறைந்த பட்சம், 20 சதவீதம் அதிகரிக்கும். அதிலும், அவசர அவசரமாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன் அமைச்சரவைப் பணிகளை பட்டியலிட்டது, அது குறித்த அறிக்கையாக, 'ரிப்போர்ட் கார்டு' கொடுத்திருக்கிறார்.
                 நிதியமைச்சர் ஜெட்லி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், முக்கிய கோப்புகளை பார்த்து, குறிப்பு எழுதுகிறார் என, கூறப்படுகிறது. அவர், கடந்த வாரம் அளித்த பேட்டியில், தன் அமைச்சரவை ஊழியர்கள் தினமும், 10 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றி கோப்புகளை பார்த்து முடிவெடுப்பதாக கூறினார். 
                      ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, தன் அமைச்சக பணிகள் குறித்து, பட்டியல் வெளியிட விரும்பிய போது, உயர் அதிகாரிகளுக்கு ஒரு சந்தேகம் எழுந்ததாம். கவுடா மகனையும், சினிமா நடிகையையும் இணைத்து வெளிவந்த சர்ச்சை, அவர் ஆர்வத்தை குலைக்குமோ என்ற தயக்கம் இருந்ததாம்.

ஆனால், அவர் ரயில்வே பயணிகளுக்கு, பயணத்தில் இதுவரை நீடிக்கும் சிக்கல்கள் படிப்படியாக குறைகிறது என்பதையும், ஜப்பான் உதவியுடன், புல்லட் ரயில் நிச்சயமாக வரும் என்பதையும் கூறி, தன் பணிகள் சிறப்பாக நடப்பதை வெளிப்படுத்திக் கொண்டார்.
இப்போது, நிலக்கரி ஊழல் குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பாக அலசப்படுகிறது. இந்த நேரத்திலும், நிலக்கரி பற்றாக்குறை இல்லை; அதேசமயம் மொத்த மின் உற்பத்தி சற்று கூடுதலாகி இருக்கிறது என்பதை, மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியிருக்கிறார். அத்தகவல் எல்லா ஊடகங்களுக்கும் சென்று மக்களை அடைய, அதிகாரிகளிடம் அதிக தகவல்கள் சேகரித்ததால், அலுவலகத்தில் அவர்கள், நீண்டநேரம் பணியாற்ற நேரிட்டது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு தவிர, மற்ற மாநிலங்களில் அதிக கவனத்துடன் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்வி எழும்.

கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமய்யா, கடந்த ஞாயிறன்று பெங்களூரு விதான் சவுதாவில், கோப்புகளை பரிசீலித்து முடிவு செய்யும் நாளாக அறிவித்திருந்தார். முதல்வர் ஆணைப்படி எடுத்த கணக்கெடுப்பில், 1.31 லட்சம் கோப்புகள் முடிவெடுக்கப்படாமல் தேங்கியிருப்பதாக கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை. அதைக் கண்டு அதிருப்தி அடைந்த சித்தராமய்யா, ஞாயிறன்று எந்த வித சம்பளமும் இன்றி, விடுமுறை நாள் என்று கருதாமல், அரசு அதிகாரிகள் கோப்புகளை பரிசீலித்து முடிவு எடுக்க உத்தரவிட்டார். அதன்படி குறைந்தபட்சம், 40 ஆயிரம் கோப்புகளுக்கு விடிவு காணப்படும்; இந்த கோப்புகள் அதிகாரிகள் பார்வையில் இரண்டு ஆண்டுகளாக காத்திருந்தவை என, அம்மாநில தலைமைச் செயலர் முகர்ஜி கூறி இருக்கிறார்.

மத்திய அரசு மட்டும் அல்ல, மாநில அரசுகளும் அதன் அதிகாரிகளும் நீண்ட உறக்கத்தில் இருந்து விழிக்கின்றனர் என்றால், இது மக்களுக்கு நல்ல காலம் வருவதைக் காட்டும் நல்ல
அறிகுறி.

No comments:

Post a comment