Labels

rp

Blogging Tips 2017

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன்

தமிழ்வழிக் கல்வி காரணமா?
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன் என்பதற்கு, அங்கு ஆங்கில வழி வகுப்புகள் இல்லை என்னும் காரணம் முதன்மைப்படுத்தப்படுகிறது. உண்மை அதுதானா? அல்ல.
ஆசிரியரின் முதன்மைப் பணி என்பது கற்பித்தல். அதுதவிர, மற்றவற்றைச் செய்ய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பழக்கப்படுத்தப்படுகின்றார்கள். ஆசிரியர்கள்தாம் எழுத்தர்கள். ஆசிரியர்கள்தாம் கல்வி அலுவலகங்களுக்குச் சென்று வரும் தூதுவர்கள். ஆசிரியர்கள்தாம் ஊதியப் பட்டியலைச் சுமந்துகொண்டு கருவூலகங்களுக்குப் போய் வரும் கணக்காளர்கள். பொதுமக்களிடம் சென்று கணக்கெடுக்கச் சொல்லி அரசால் ஏவப்படும் புள்ளி விவரச் சேகரிப்பாளர்கள் இப்படி அஷ்டாவதானம்
செய்யும் சூழலில் அவர்களுக்குப் பாடங்களை நடத்துவதற்கு ஏது நேரம்? ஆயிரம் மாணவர்கள் படிக்கக் கூடிய பல பள்ளிகளில் எழுத்தர்கள் அமர்த்தப்படுவதே இல்லை. அந்தப் பணிகளை ஆசிரியர்களே நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்களின் முதன்மைப் பணியாகிய கற்பிப்பது பாதிப்படைகின்றதே என்று யாருக்கும் கவலையில்லை.
விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைவு ஏடுகள் இவை எத்தனை பேருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன? தேர்ச்சி விகிதம் ஏன் குறைந்தது? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன என்றெல்லாம் மேலிருந்து கேட்கப்படும் புள்ளிவிவரங்கள். கேள்விகளைக் கேட்பவர்களுக்கே காரணம் புரியும், இருப்பினும் புள்ளி விவரங்களை வாங்கி சேர்த்து வைப்பார்கள், அவர்களுக்கு மேலிருப்பவர்கள் கேட்டால் காட்டுவதற்காக.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படுவதைப் போல நியாயமாக இல்லை. ஓர் ஆசிரியர்க்கு ஒரு வகுப்பில் 60 - 70 - 80 என்று மாணவர் எண்ணிக்கை இருந்தால், தனிப்பட்ட மாணவர் மீது ஆசிரியர் எப்படித் தனிக்கவனம் செலுத்த முடியும்? இந்தப் பிரச்சனையைத் தனியார் பள்ளிகள் சொல்லிக்காட்டி, விளம்பரப்படுத்தி அதாவது, எங்கள் பள்ளியில் ஓர் ஆசிரியர்க்கு 25 பேர்தான் 30 பேர்தான் என்று சுட்டிக்காட்டிச் சேர வருமாறு அழைப்பதை நாம் கண்டுவருகிறோம்.
பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதுதான் அரசுப் பள்ளிகளின் யதார்த்த நிலை. சில பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்தை நடத்த ஆங்கிலமொழி பயின்ற ஆசிரியர்கள் அமர்த்தப்படுவதில்லை. கணக்கு ஆசிரியரே அதையும் கவனிப்பார்.
செவ்வாய்க் கிரகத்திற்குச் செயற்கைக் கோள், ஸ்டெம் செல் ஆய்வு, நியூட்ரினோ ஆய்வு, நரம்புச் சில்லுகளின் தொழில்நுட்பம் என மிகமிக வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் யுகத்தில் பள்ளிக் கூடங்களில் சோதனைக் கூடங்கள் அமைந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். பல பள்ளிகளில் ஆய்வகங்கள் இல்லை. பல இடங்களில் இருந்தும் பயனில்லை.
கல்வி அலுவலரின் சோதனை என்பது இக்காலத்தில் பாடங்கள் நடத்தப்பட்டனவா இல்லையா என்பதைச் சோதிக்க இல்லை. விலையில்லா மடிக்கணினி முறையாக வழங்கப்பட்டிருக்கின்றனவா, மிதிவண்டி, பாடநூல்கள், பயிற்சி ஏடுகள், சத்துணவு எண்ணிக்கைகள் ஒத்துப் போகின்றனவா என்பதை ஆராயத்தான்.
படித்தார்களோ படிக்கவில்லையோ, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவேண்டும். வெற்றி என்பதே அரசின் இலக்கு. எட்டு ஆண்டுகளில் சாதிக்க முடியாதவற்றை ஒரே ஆண்டில் எப்படிச் சாதிப்பது? ஆறாம் வகுப்பில் தெரிந்திருக்கவேண்டிய கணக்கை, அறிவியலை, ஆங்கிலத்தை ஒரு மாணவன் தெரிந்திருக்காவிடில், ஏழாம் வகுப்பு அவனுக்கு எப்படிச் சாத்தியமாகும்? எந்த நாட்டிலாவது இப்படிப்பட்ட தேர்ச்சி விகிதம் காட்டுகின்றார்களா?
அரசுப் பள்ளிகள் மதிப்பையும் மரியாதையையும் பெறுவது எப்படி? மாணவர்கள் அவ்வப்போது எழுதும் தேர்வு விடைத்தாள்கள், பயிற்சி ஏடுகள்,கட்டுரைகள் ஆகியன முறையாகத் திருத்தப்படவேண்டும். தனியார் பள்ளிகள் இதில்தான் தங்களுடைய சிறப்பை வெளிப்படுத்துகின்றன. திருத்தப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களிடம் கொடுத்துப் பெற்றோர்களிடம் காட்டிக் கையயழுத்துப் பெற்றுவருமாறு வற்புறுத்துகின்றன. பள்ளிக்கூடம் முறையாகச் செயல்படுகின்றது என்பதற்கு இந்த முறையானது சரியான சான்று. தனியார் பள்ளிகள் கடைப்பிடிக்கும் இந்த முறையை அரசுப் பள்ளிகள் ஏன் பின்பற்றக் கூடாது?
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவற்றின் தரம் உயர்ந்து, பெற்றோர்களுக்கு அவற்றின்மீது நாட்டமும் நம்பிக்கையும் பிறந்துவிடுமா? அவற்றில் நிலவும் ஆசிரியர்களின் புறப்பணிச் சுமை, உள் கட்டமைப்பு வசதிகள் குறைபாடு, விடைத்தாள்கள் திருத்தும் பணியில் அலட்சியம், பாடங்களைப் புரிந்து கொள்ளாத மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்தல் ஆகியன யாவும் முன்பு போலவே தொடரும். அது புண்ணுக்குப் புணுகு பூசிய கதையாகவே முடியும்.
நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல் என்பதே தமிழ் கண்ட நீதி.

No comments:

Post a comment