Labels

rp

Blogging Tips 2017

ஆங்கிலம் கற்று தராததால் தொடக்கப் பள்ளிகளுக்கு மூடுவிழா? மாணவர்களை சேர்க்க வீடு வீடாக கெஞ்சும் ஆசிரியர்கள்

 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில ஆசிரியர்களே இல்லாத காரணத்தால், பெற்றோர் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க முன்வரவில்லை. ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று பெற்றோரைச் சந்தித்து மாணவர்களை சேர்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி முதல் ஜூன் வரை, தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தனியார் பள்ளித் தாளாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை, வீடு, வீடாகச் சென்று சிபாரிசு கேட்கும் நிலை உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது.
இதனால், நலிந்த பிரிவினர் மற்றும் கிராமப் புறத்தினருக்கு ஆங்கில வழிக் கல்வியோ, ஆங்கில மொழியோ எட்டாக்கனியாகி உள்ளது.ஆனால், அரசு தொடக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்கள் சேர்வரா என, ஆசிரியர்கள், வீடு, வீடாகச் சென்று, பெற்றோரைச் சந்தித்துக் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கல்வித் துறையில் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

*தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளுக்கு, ஒரே ஆசிரியர் என்ற
நிலையே உள்ளது.4,000த்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், 30க்கும் குறைவான மாணவர்களேஉள்ளனர். இவற்றின் தரத்தை உயர்த்தாமல், இவற்றை மூடுவதற்கான பட்டியலை, அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
*ஓராசிரியர் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அனைவரையும் அமர வைத்து, பாடம் கற்றுத் தரும் சூழல் உள்ளது. இதனால் யாருக்கு எந்த பாடம் என, மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
*அந்த ஒரு ஆசிரியர் கூட, நீதிமன்றப் பணி, கல்வி அலுவலக அலுவல் பணி, இலவசத் திட்டப் பணி, சர்வே எடுத்தல், வாக்காளர் விண்ணப்பம், ஆதார் விண்ணப்பம் பூர்த்தி செய்தல் போன்றவற்றுக்கு சென்று விடுவதால், பள்ளியில் ஆசிரியரே இல்லாமல் இயங்கும் சூழலும் உள்ளது.
*ஆங்கிலப் பாடம் இருந்தாலும், ஆங்கிலம்பேசக் கற்றுத் தரும் தனி ஆசிரியர்கள் இல்லை. பல ஆசிரியர்கள், பிளஸ் 2 முடித்து, டிப்ளமோ பட்டயப் படிப்பு முடித்து வந்தோர் என்பதால், தனியார் பள்ளிக்கு ஈடாக ஆங்கிலம் கற்றுத் தர, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கவில்லை.
*கழிப்பறைகள் சுத்தமாக இல்லை; பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேள்விக்குறியாகி உள்ளது; சமூக விரோதிகள் நடமாட்டம் மற்றும் உள்ளூர் பிரபலங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த, பள்ளிகளுக்கு காவலாளியோ, கட்டுப்பாடுகளோ இல்லை; ஒழுக்க வகுப்புகள், தொழில்நுட்ப வசதிகள் அறவே கிடையாது.

இதனால், அரசு தொடக்கப் பள்ளி களின் அருகில் வர, பெற்றோர் தயங்குகின்றனர். தமிழ் வழிக் கல்வியானாலும், ஆங்கிலத்தை ஒரு மொழியாக, சரளமாக எழுதவும், பேசவும் கற்றுக் கொடுக்கக் கூட, கல்வித் துறை முயற்சி மேற்கொள்ளாததே, பரிதாப நிலைக்கு காரணம் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர்:
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:இலவசத் திட்டங்களை நீக்கி, ஆசிரியர்களை மற்ற பணிகளில் ஈடுபடுத்தாமல், கற்பித்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து வகுப்பு மாணவர்களையும் மொத்தமாகக்கணக்கிட்டு, 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியரை நியமிக்கும் முறையை மாற்றி, ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என, கட்டாயம் நியமிக்க வேண்டும். ஆங்கிலப் புலமை பெற்ற, ஆங்கிலம் பேசக் கற்றுத் தரும் ஆசிரியர்கள் அவசியம் தேவை. தனியார் பள்ளிகளைப் போல், தொழில்நுட்ப முறையில் பாடம் நடத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம். ஆசிரியர்களுக்கு அரசியல்வாதிகள், உள்ளூர் பிரபலங்கள் மற்றும் அதிகாரிகளின் நெருக்கடி தரக் கூடாது. மாணவர்களைக் கண்டிக்க, ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வேண்டும்.தொடக்கக் கல்வி தான், அடுத்து வரும் வகுப்புகளுக்கு அடிப்படை என்பதைப் புரிந்து, அதற்கு அரசு அதிக கவனம் செலுத்தினால், மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா போன்று, அரசு பள்ளிகளும் முன்னிலைக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a comment