Labels

rp

Blogging Tips 2017

கடைசி இடத்தில் கடலூர் காரணம் என்ன? By கே. விஜயபாஸ்கர், கடலூர்-05 June 2013-dinamani.com

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டம் மாநிலத்தில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு பல கல்வியாளர்களை உருவாக்கிக் கொடுத்த பழமையான கல்வி நிறுவனங்களைக் கொண்ட கடலூர் மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 75.21 சதவீதமாக குறைந்து மாநிலத்தில் 32-வது இடத்துக்கு (கடைசி இடம்) தள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 19,928 மாணவிகள் உள்பட மொத்தம் 40, 237 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 16,024 மாணவிகள், 14,240 மாணவர்கள் என மொத்தம் 30,264 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டைவிட 6 சதவீதம் தேர்ச்சி குறைந்து, மாநிலத்தின் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மாணவிகளைவிட 381 மாணவர்கள் அதிகமாக தேர்வு எழுதினர். இருப்பினும், அவர்களைவிட 1,784 மாணவிகள் கூடுதலாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 70.12 சதவீதம், மாணவிகள் 80.41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி துர்கா 498, ஆர்த்தி, நிலா, பவித்ரா ஆகியோர் தலா 497, ஜெசிமா, சங்கீதா, வசுமித்ரா ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். மாநில ரேங்க் பட்டியலில் மாணவர்கள் ஒருவர்கூட இடம்பெறவில்லை.

ஆங்கிலம் பாடத்தில் ஒருவரும், கணிதத்தில் 688 பேர், அறிவியல் 1,370, சமூகஅறிவியலில் 726 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 6,069 மாணவர்களும், 3,904 மாணவிகளும் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களில், தமிழ் பாடத்தில் 6,637 பேரும், ஆங்கிலத்தில் 8,837 பேரும்,கணிதத்தில் 3,816 பேர், அறிவியலில் 606 பேர், சமூக அறிவியலில் 5,676 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 9,973 பேர் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களில் 2,181 பேர் ஒரு பாடத்திலும், 2,837 பேர் இரு பாடங்களிலும் 2,619 பேர் மூன்று பாடங்களிலும், 1,935 பேர் நான்கு பாடங்களிலும், 424 பேர் ஐந்து பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்த மோசமான தேர்ச்சி சதவீதத்துக்கு காரணம் அரசுப் பள்ளிகள்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய 225 அரசுப் பள்ளிகளில் 10 பள்ளிகள் மட்டும்தான் 100 சத தேர்ச்சிப் பெற்றுள்ளன.

ஆனால் 150 தனியார் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவிகள் 7 பேரும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்தான்.

இது குறித்து கல்வி ஆர்வலரான விருத்தாசலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ராஜூ கூறியது: அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதை காட்டிலும், சொந்த பணிகளே நிறைய இருக்கிறது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தொழிலதிபர்களாகவும், வியாபாரிகளாகவும் செயல்படுவதால் மாணவர்கள் மீது கவனம் செலுத்துவதில்லை.

இதனால் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி முறையாக கிடைப்பதில்லை. 10-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவனுக்குப் புத்தகம் வாசிக்க தெரியாமல் இருந்தால், அதற்கு காரணம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான்.

இதனால் அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியை தரமானதாக்க வேண்டும். தனியார் பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்தால், சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

இதே நிலை அரசுப் பள்ளிகளில் இருக்க வேண்டும். மாவட்டத்தில் 10 அரசுப் பள்ளிகள் 100 சத தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த பள்ளிகளை முன்னுதாரணமாக கொண்டு, வரும் ஆண்டில் அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.ஜோசப் அந்தோணிராஜிடம் கேட்டபோது, "தென் மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளதற்கு காரணம், அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி மீது உள்ள ஆர்வம்தான்.

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்கள் பெற்றோருக்கு உதவ, படிக்கும் காலத்திலேயே வேலைக்குச் செல்கின்றனர்.

மேலும் அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் மாணவர்கள் வருவதில்லை. குழந்தைகளின் கல்வியில் பெற்றோருக்கும் அக்கறை இல்லை.

மாணவர்களைக் கண்டித்தால் ஆசிரியரிடம் சண்டைக்கு வரும் பெற்றோர், குழந்தைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை.

கடலூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணரவில்லை' என்றார்.

பிளஸ் 2 படிக்கும்போதே 100 நாள் வேலைக்குச் செல்லும் மாணவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர், அதே சமயத்தில் 100 நாள் வேலை செய்து குழந்தைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோரும் கடலூர் மாவட்டத்தில் இருக்கின்றனர்.

கல்வி மட்டுமே குடும்பத்தின் பொருளாதார நிலையையும், சமுதாயத்தையும் மாற்றும் திறன் படைத்தது என்பதை பெற்றோர் உணர வேண்டும். இந்த உணர்வை உருவாக்க வேண்டியது தங்களின் கடமை என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட தொடங்கும்போதுதான் கடலூர் மாவட்டம் கல்வி நிலையில் ஏற்றம் பெறும்' என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள்.

"ஆசிரியர்கள் முன் வருவதில்லை'

இது குறித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கச் செயலரும் கல்வி ஆர்வலருமான மு.மருதவாணனிடம் கேட்டபோது, "அரசுப் பள்ளிகள் பலவற்றில் நல்ல காற்றோட்டமான வகுப்பறைகள், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை.

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் வேலைப் பார்க்கும் ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் நகர்ப்புறங்களில்தான் குடியிருக்கின்றனர். இதனால் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்தகூட பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வருவதில்லை.

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பள்ளிகள் உள்ள கிராமத்திலேயே ஆசிரியர்கள் தங்க வேண்டும்.அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பெற்றோரின் பொருளாதார நிலையும் ஒரு காரணம்

இது குறித்து விளக்கம் பெற மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டும் பேச மறுத்த நிலையில், ஒரு அதிகாரி மட்டும் நம்மிடம் பேசியது: மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையில் 278 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கடலூர் மாவட்டத்தில்தான் உள்ளன.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசுவதற்கே அச்சப்படும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். கிராமப்புறங்களில் பெற்றோரின் பொருளாதார நிலை குழந்தைகளின் கல்வி குறித்து சிந்திக்க வைக்கவில்லை.மாணவர்களைப் படிக்க வைக்க பெற்றோரின் கவனத்தை ஈர்க்க அரசு முயற்சிக்க வேண்டும்.

மலை கிராமங்கள் போன்று கிராமப்புற மாணவர்கள் அனைவருக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a comment