Labels

rp

Blogging Tips 2017

தாய்மொழி கல்விதான் வேண்டுமா? தினத்தந்தி தலையங்கம்

தொடக்க பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு பயிற்றுமொழியாக தாய்மொழிதான் இருக்கவேண்டுமா? என்பது குறித்த ஒரு வழிகாட்டும் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் 5 பேர்கள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விரைவில் தீர்ப்பாக அளிக்கப்போகிறது
.
 ஒவ்வொருவருடைய மொழியும், அவனை பெற்றெடுத்த தாய்க்கு இணையாக கருதப்படுவதால்தான், தாய்மொழி என்று எல்லோரும் சொல்கிறோம். அதனால்தான், ‘தமிழை பழித்தவனை என்தாய் தடுத்தாலும் விடேன்’ என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் கூறிய அந்த வீரமொழிகள், இன்றும் ஒவ்வொருவருடைய நாடி நரம்புகளிலும் ஊடுருவி நிற்கிறது. தாய்மொழி கல்வி மூலம்தான் ஒருவன் சிறந்த அறிவை பெறமுடியும் என்ற உணர்வு, தமிழ் கூறும் நல்லோரிடத்தில் இருக்கிறது.
ஆனால், காலப்போக்கில் ஆங்கிலமோகம் அசைக்கமுடியாத நிலைக்கு வளர்ந்துவிட்டது. தன்பிள்ளை தமிழை மட்டும் தட்டுதடுமாறாமல் பேசவேண்டும் என்பதில்லாமல், ஆங்கிலத்தில் அரைகுறையாக பேசினாலே போதும் என்ற நிலைக்கு சமுதாயம் ஆளாகிவிட்டது. அதற்கு காரணம் கேட்டால், ஆங்கிலம் உலக மொழி, அதில் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்று காரணம் கூறுகிறார்கள். அதிலும், உண்மை இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆங்கிலமோ அல்லது வேறுமொழிகளோ படித்தால்தான் தமிழக எல்லையை தாண்டி ஒருவன் வேறு இடங்களுக்கு சென்று உயர்ந்த வேலைகளை பெறமுடியும் என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஆனால், சீனாவிலும், ஜப்பானிலும் ஆங்கிலத்தை ஒரு மொழியாக படித்தார்களே தவிர, பயிற்று மொழியாக தாய்மொழியை வைத்துக்கொண்டதால்தான், அவரவர் படித்த பாடங்களை ஆழமாக புரிந்துகொண்டு படிக்க முடிந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல், பட்டம் வாங்கும் நிலைமை ஒரு காலத்தில் இருந்தது. ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக கொண்டு படிப்பவர்கள், மொழிப்பாடமாக இந்தியையோ, பிரெஞ்சு மொழியையோ எடுத்து படித்து முடிக்க வழி இருந்தது. நல்லவேளையாக தமிழக அரசு, ‘தமிழ் இனி மெல்ல மெல்ல சாகும்’ என்று பாரதியார் சொன்னாரே, அந்த நிலை வந்துவிடாமல் தடுக்க, கண்டிப்பாக தமிழ் ஒரு பாடமொழியாக இருக்கவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததால், நமது மாணவர்கள் எல்லாம் இப்போது தமிழை படிக்காமல் இருக்கமுடியாது என்ற நிலைமைக்கு உருவாகிவிட்டார்கள். இனி ‘தமிழ் சாகாது, என்றும் வாழும்’.
இந்த சூழ்நிலையில், கர்நாடக அரசு, கன்னடம்தான் தொடக்கப்பள்ளிக்கூடங்களில் பாடமொழியாக இருக்கவேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் பி.சதாசிவம், ரஞ்சன்கோகாய் ஆகியோர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளனர். மிகவும் உணர்ச்சிபூர்வமான இந்த பிரச்சினை குறித்து கர்நாடகம் மட்டுமல்லாமல், அனைத்து மாநிலங்களையும் அசைக்கப்போகும் இந்த பிரச்சினை தொடர்பாக ஒரு தெளிவான தீர்ப்பு வேண்டும், ஒரு வழிகாட்டுதலான தீர்ப்பு வேண்டும் என்ற வகையில், 5 பேர்களை கொண்ட பெஞ்ச் இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த பெஞ்ச் விசாரிக்கவேண்டிய விஷயங்களில் எந்த மொழியை அவன் படிக்கவேண்டுமென்பதை யார் தீர்மானிப்பது? தொடக்க கல்வியில் என்ன பயிற்றுமொழி என்பதை அந்த மாணவனோ, அவன் பெற்றோரோ தீர்மானிக்க உரிமை உண்டா? தாய்மொழியைத்தான் எடுத்து படிக்கவேண்டும் என்பது கட்டாயப்படுத்த முடியுமா?, அப்படி கட்டாயப்படுத்தினால், அது அரசியல் சட்ட விதிமுறை மீறலா? என்பது போன்ற பல விஷயங்களை இந்த பெஞ்ச் விசாரித்து இறுதி முடிவை அறிவிக்கப்போகிறது. இது, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமா?, சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்குமா? என்பது தீர்ப்பில்தான் தெரியும்.
ஆக, தாய்மொழியை தொடக்க கல்வியில் பாடமொழியாக கொண்டுவர கட்டாயப்படுத்த முடியுமா?, முடியாதா? என்பது குறித்து இந்த அரசியல் சாசன பெஞ்சு அளிக்கப்போகும் தீர்ப்பு, தாய்மொழிதான் பயிற்று மொழியாக இருக்கவேண்டுமா?, அல்லது அவரவர் விருப்பப்படி பயிற்று மொழி இருக்கலாமா? என்ற இரு கேள்விகளுக்கும் விடையை சொல்லிவிடும்.

No comments:

Post a Comment