Labels

rp

Blogging Tips 2017

சாராயநாடு உங்களை இனிதே வரவேற்கிறது - சி. இராஜாராம்

”ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற மக்கள் இப்போது மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். என்ன செய்வது? வெள்ளைக்காரர்களுக்குப் பதிலாக கொள்ளைக்காரர்கள் அல்லவா ஆட்சிக்கு வந்துவிட்டிருக்கிறார்கள்”
கண்முன்னே நம்முடைய அடுத்த தலைமுறை புதைகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது. சந்தோஷமோ துக்கமோ இன்றைய இளைஞன் மதுக்கடைகளை நோக்கியே ஓடுகிறான். பண்பாட்டின் கொடி தலைகீழாகப் பறந்து கொண்டிருக்கிறது. ஆள்வோர்களும் ஆன்றோர்களும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் துயரம்

1937ம் ஆண்டு மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1950ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47வது பிரிவில் மருத்துவ காரணங்களைத் தவிர வேறு எக்காரணத்துக்கும் போதையூட்டும் பானங்கள் பருகுவதைத் தடைசெய்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 30 ஆகஸ்ட் 1971 முதல் தமிழகத்தில் ‘மதுவிலக்கு’ தள்ளி வைக்கப்படும் என்று தமிழக அரசு ஆறிவித்தது. மதுக்கடைகளைத் திறப்பதற்கு வகை செய்யும் அவசரச்சட்டம் ஒன்றை அன்றைய கவர்னர் கே.கே.ஷா பிறப்பித்தார்.
மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து, சுதந்திரா கட்சி எம்.எல்.எ. டாக்டர் ஹண்டேயும், வி.எஸ். ஸ்ரீகுமார், வெங்கடசாமி நாயுடு ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். ‘மதுவிலக்கு சட்டத்தை நிர்வாக உத்தரவு மூலம் ஒத்திவைக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பது சட்டவிரோதமான செயல். இதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கூறி இருந்தார்கள்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீராசாமி, நீதிபதிகள் பி.எஸ்,கைலாசம், ஆர்.சதாசிவம், டி,ராமபிரசாத்ராவ், வி.வி.ராகவன் ஆகிய 5 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தார்கள். ‘மதுக்கடைகளைத் திறக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் இந்த மனு செயலற்றதாகிவிடுகிறது’ என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள்.
மதுவின் நிறமும் மணமும் அறியாத மூன்று தலைமுறையின் உயர்நிலைப்பண்பாட்டை மதுக்கடைகளைத் திறந்ததன் மூலம் பாழ்படுத்தியவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. கொழுந்து விட்டெரியும் தீப்பந்த வளைவுக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு திகழக்கூடும் என்று வார்த்தை ஜாலத்தால் தன் செயலை நியாயப்படுத்தினார். அவர் கோடு போட்டார் என்றால் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என அடுத்த வந்தவர்களோ ரோடே போட்டுவிட்டனர்.
சமூக சேவகரான டிராபிக் ராமசாமி பரிபூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதோடு நிற்காமல், மதுவினால் இந்தியாவில் மரணம் அடைபவர்களைவிட சாலை விபத்துகளில் மரணம் அடைபவர்களே அதிகம். ஆகவே டிராபிக் மரணங்களைப் பற்றிக் கவனம் செலுத்துமாறு டிராபிக் ராமசாமிக்கு இலவச அறிவுரையும் வழங்கியது. ஆனால், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெயசந்திரன் ஒரு விழாவில் பேசும்போது ‘இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சத்து 30ஆயிரம் பேர் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். விபத்துக்கு முக்கிய காரணமாக அமைவது குடித்துவிட்டு வாகனங்களை ஒட்டுவதுதான். கனரக வாகன ஒட்டிகளில் 90 சதவிகிதத்தினர் குடித்துவிட்டு வாகனங்களை ஒட்டுகின்றனர். இரு சக்கர வாகனங்களிலும் 40சதவீதம் பேர் மது அருந்திவிட்டு வாகனங்களை ஒட்டுவதாகவும், சென்னையில் நடந்துள்ள 5 ஆயிரம் விபத்துக்களில் 621 பேர் உயிரிழக்க மதுவே காரணம் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் சாலை விபத்துக்களில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே இதற்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார்.
1923ல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்த இரட்டை மலை சீனிவாசன் சென்னை சட்டசபையில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு விடுமுறை நாட்களிலும் மதுக் கடைகள் மூடப்படவேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அன்றைய ஆங்கிலேய அரசு அத்தீர்மானத்தை ஏற்று மதுவிலக்கை அமல்படுத்தியது. ஆங்கிலேயர்களுக்கு இருந்த சமூக அக்கறையில் நூற்றில் ஒரு பங்கு கூட நம் தலைவர்களுக்கு இல்லை என்பது வேதனையிலும் வேதனையே.
மது கூடாதென்று எத்தனையோ அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன. ஊருக்குப் பத்துபேர் காந்திய இயக்கமும், தமிழருவி மணியனும் விடாது போராடிவருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் வன்னியர் சங்கத்தை ‘பட்டாளி மக்கள் கட்சி’யாக ஜூலை 16,1989ல் உருவாக்கிய ராமதாஸ், கட்சியை ஆரம்பித்த மூன்றாவது மாதமே (அக்.2.1989) மதுக்கடையை முற்றிலும் மூடக்கோரும் போராட்டத்தைத் தொடங்கி கையில் பூட்டோடு இன்று வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
மதுவிலக்கு சட்டத்தினால் எந்தத் தனி நபருக்கும் மது விற்பனை செய்ய உரிமையில்லை என்று கூறி தற்போது அரசே ஏகபோக மதுவியாபாரம் செய்கிறது. மதுநாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு ஏன்று பாட்டில்களிலும், கடைகளிலும் எழுதிவைத்ததோடு தன்னுடைய சமூகக் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு அரசு செயல்பட்டுவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ‘டாஸ்மாக்’ மூலம் கிடைக்கும் வருமானம்தான் அரசின் இலவசத் திட்டங்களுக்கான நிதியை அள்ளித்தந்து கொண்டிருக்கிறது. ‘டாஸ்மாக்’ கடைகள் அனைத்தையும் மூடிவிட்டால் தமிழக அரசால் எவ்விதமான இலவச திட்டங்களையும் செயல்படுத்த முடியாது.
ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் அதில் 100 ரூபாயை டாஸ்மாக்கில் மது குடிக்கக் கொடுக்கிறான். வருடத்துக்கு 36,000 ரூபாய் என்று ஐந்து ஆண்டுகளில் 1,80,000 ரூபாயைக் குடித்தே அழிக்கிறான். டி.வி., ஃபேன், மிக்ஸி என்றெல்லாம் அநாவசியமாக அவனுக்கு வழங்கப்படும் ஆடம்பர இலவசங்களின் மதிப்பு இந்த ஐந்து ஆண்டுகளில் 20,000 ரூபாய்தான் இருக்கும். இலவசத்தை லஞ்சமாகக் கொடுத்து வாக்குகளைப் பெற்று, அவனிடமிருந்து பெரும்பணத்தை அரசுகள் சுரண்டுகின்றன. மது விற்பனையின் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு 23,000 கோடி வருவாய் வருகிறதென்றால் இதைவிடக் கேவலம் வேறென்ன இருக்க முடியும்.
தமிழகம் முழுவதும் 6,800 மதுக்கடைகள் (இன்னும் அதிகமாகலாம்) 33 ஆயிரம் பணியாளர்கள், சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடிக்கு விற்பனை என உச்சத்தில் இருக்கிறது. வருடத்துக்கு ரூ.13 ஆயிரம் கோடி, ரூ.15 ஆயிரம் கோடி விற்பனை என்பது படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ.25,000 கோடி என்ற இலக்கைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. விற்பனை இலக்கை எட்டாத அலுவலகர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 150க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
நாமக்கல்லில், விற்பனை இலக்கை எட்டாததால், டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள் 34 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நடைபெற்ற விற்பனையைக் காட்டிலும் நடப்பாண்டில் மதுபான விற்பனை குறைந்ததே இதற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் 28 மாவட்ட மேலாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 1,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.’ தமிழக அரசின் இப்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் குடிகாரர்களாக மாற்றிவிட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பது என்ற முடிவோடு அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
தமிழ் மொழியின் மீது அக்கறை கொண்டு ‘தமிழ்த்தாய்’க்கு சிலை எடுக்க ரு.100 கோடி செலவு செய்ய காத்திருக்கும் அரசு, தமிழ் இலக்கிய நூல்களான திருக்குறள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், போன்றவற்றில் மதுவின் தீமைகள் குறித்துக் கூறப்பட்டுள்ளதை மறந்துவிட்டது.
இந்தியாவில் இரண்டு கோடி பேருக்கு மேல் மதுபானம் குடிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மதுபான விற்பனை, ஆண்டுக்கு 8% உயர்ந்துள்ளது. இந்த விற்பனை 2012&2013ல் 30% ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வார நாட்களில் 1.60 லட்சம் பெட்டி, வார இறுதி நாட்களில் 1.90 லட்சம் பெட்டி மதுவகைகள் விற்பனையாகின்றன. ஜனவரி 1ம் தேதி மட்டும் 2.75 லட்சம் பெட்டிகள் விற்பனையானது (இந்த ஆண்டு இன்னும் கூடலாம்). பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகம் உள்ளது. தமிழகத்தில் குடிமகன்கள் தினந்தோறும் சராசரியாக 51, 60,000 பாட்டில்களைக் குடித்துத் தீர்க்கின்றனர்.
21 வயது நிரம்பாதவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. (பிறப்புச் சான்றிதழோடு சென்றால்தான் இனி பாட்டில் கிடைக்குமோ?) 2003ம் ஆண்டு விதிகளில் எண் 15ன் கீழ் 21வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கத்தடை இருந்தாலும் மது அருந்துவதற்கு தடை இல்லை. 21 வயதுக்கு மேற்பட்டோர் மது அருந்துவதைத் தடுக்காத சட்டம் எப்படி வாங்குவதை மட்டும் தடை செய்ய முடியும்?

சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்திலேயே இரண்டு கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் காந்தி. ஒன்று தீண்டாமை ஒழிப்பு, மற்றொன்று கள்ளுக்கடை மூடல். வெள்ளையர் வீழ்ச்சிக்கு முன் இதை நடத்திக்காட்ட வேண்டும் என்று துடித்தார் காந்தி. அவருடைய வழித்தடத்தில் தான் ராஜாஜியின் செயல்பாடுகளும் இருந்தன. பெரியாரும் தனக்கு சொந்தமாக இருந்த தோப்பையே வெட்டி அழித்தார்.
இந்தியாவை ‘காந்தி நாடு’ என்றே உலகம் மதிப்பிடுகிறது. ஆனால், காந்தி பிறந்த குஜராத் தவிர மற்ற மாநிலங்களில் மதுவின் பிடியிலேயே பெரும்பான்மை மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற மக்கள் இப்போது மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். என்ன செய்வது? வெள்ளைக்காரர்களுக்குப் பதிலாக கொள்ளைக்காரர்கள் அல்லவா ஆட்சிக்கு வந்துவிட்டிருக்கிறார்கள்

No comments:

Post a Comment