Labels

rp

Blogging Tips 2017

மக்களவைத் தேர்தல்: இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

பதினாறாவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கும் திரிபுரா மாநிலத்தில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் அஸ்ஸாமில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதில், முதற்கட்டமாக தேஜ்பூர், கோலியாபார், ஜோர்ஹட், திப்ரூகர், லக்கிம்பூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, திரிணமூல் காங்கிரஸ், அஸ்ஸாம் கண பரிஷத், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஆம் ஆத்மி, சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மொத்தம் 51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன.

முக்கிய வேட்பாளர்கள்: காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அமைச்சர்கள் ராணி நாரா, பவன் சிங் கட்டோவர், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான பிஜாய் கிருஷ்ண ஹண்டிக், முதல்வர் தருண் கோகோயின் மகன் கெளரவ் கோகோய், பூபேன் குமார் போரா உள்ளிட்டோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸில் வாய்ப்பு கிடைக்காத மணிகுமார் சுப்பா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஸ்வரூபானந்த சோனாவால், காமாக்யா பிரசாத் தசா, அஸ்ஸாம் கண பரிஷத் கட்சி சார்பில் அருண் குமார் சர்மா, பிரதீப் ஹஸாரிகா மற்றும் ஜோசப் டோப்போ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ள "உல்ஃபா' இயக்கத்தின் கமாண்டரான ஹீரா சரண்யா என்ற நப குமார் சரண்யா, போடோ அல்லாத அமைப்பு ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றார்.
இந்தத் தேர்தலில் 64,41,634 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 31,20,067 பேர் பெண்கள். மொத்தம் 8,588 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர், பிகார் ஆகிய மாநிலங்களை அடுத்து, வடகிழக்கு பிராந்தியத்தில் முதல் முறையாக அஸ்ஸாமில் வாக்குச்சாவடிக்குள் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
3,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு) எஸ்.என்.சிங் கூறுகையில், ""தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி 3 கட்டத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 24,267 வாக்குச்சாவடிகளில் 3,000 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் அல்லது பிற அமைப்பினரால் வன்முறை, வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்குப்பதிவு நடைபெறவதில் இடையூறு ஆகியவற்றின் அடிப்படையில் அவை பதற்றமானவையாக கருதப்படுகின்றன.
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சுமார் 235 கம்பெனிகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என்றார்.
அஸ்ஸாமில் இரண்டாம் கட்டமாக 3 தொகுதிகளுக்கு 3,698 வாக்குச்சாவடிகளில் இம்மாதம் 12ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 6 தொகுதிகளுக்கு 11,981 மையங்களில் 24ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
திரிபுரா: இடதுசாரிகளின் ஆட்சி நடைபெறும் திரிபுராவில் இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் திரிபுரா மேற்கு தொகுதியில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சங்கர் பிசாத் தத்தா, காங்கிரஸின் அருணோதய் சாஹா, பாஜகவின் சுதீந்திர தாஸ்குப்தா, திரிணமூல் காங்கிரஸின் ரத்தன் சக்ரவர்த்தி ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம்: 1952 முதல் 2009ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 1996இல் இந்த மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
தற்போதைய தேர்தலில் 6,12,092 பெண் வாக்காளர்கள் உள்பட 12,46,794 பேர் வாக்களிக்க உள்ளனர். 1,605 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை, 486 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
9 வாக்குச்சாவடிகளில் முழுவதும் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் போலீஸாருடன் 35 கம்பெனி பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்திய-வங்கதேச எல்லையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிழக்கு திரிபுரா தொகுதிக்கு (தனி) இம்மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

No comments:

Post a comment