Labels

rp

Blogging Tips 2017

தலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கல்வித்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கல்வித் துறை விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நேரடி தொந்தரவு
சென்னை ஐகோர்ட்டில் காஞ்சீபுரம் மாவட்டம், கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைகள் ஏ.சாந்தி, கே.சி.கவிதா, வி.அனுராதா, எம்.மரகதம், கே.அன்னபூரணி, எல்.ரேவதி, எஸ்.உமா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் பள்ளியில் 151 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நாங்கள் தலைமை ஆசிரியர் எம்.கே.பீம்குமாரின் கீழ் பணியாற்றுகிறோம். அவர் கடந்த 2012-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அவர் அங்கு சேர்ந்த சில நாட்களில் இருந்தே நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.
உரசியபடி நிற்கிறார்
உடல் ரீதியாகவும், வார்த்தைகள் வழியாகவும் அவர் செய்துவரும் பாலியல் தொந்தரவுகள் எல்லை கடந்துவிட்டன. வருகைப் பதிவேட்டை அவருக்கு மிக அருகில் வலது பக்கத்தில் வைத்துக்கொள்வார். பின்னர் அவரை நாங்கள் நெருங்கி நின்று, அதில் கையெழுத்திடக்கூறுவார்.
ஆசிரியை யாரையாவது தன் முன்னால் நிற்க வைத்துக் கொண்டு, செல்போனில் வேறு யாரிடமாவது பேசுவதுபோல், பெண்ணின் உறுப்புகளை வர்ணிப்பார். அலமாரியில் இருந்து ஏதையாவது எடுக்கும்படி ஆசிரியையிடம் கூறிவிட்டு, அந்த ஆசிரியையை உள்நோக்கத்தோடு உரசியபடி நிற்கிறார்.
குழு அமைக்கப்படவில்லை
இந்த வகையில் எத்தனையோ சொல்ல முடியாத பாலியல் தொந்தரவுகளை பீம்குமார் செய்து வருகிறார். எனவே ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் கணவரின் ஆலோசனைப்படி, காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் 13.10.14 அன்று புகார் கொடுத்தோம். ஆனால் அவர் எங்கள் புகாரை ஏற்க மறுத்துவிட்டார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமை குறித்து புகார் கூறுவதற்கு வசதியாக குழு அமைக்கப்படவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கல்வித் துறையின் கீழ்வரும் ஒவ்வொரு இடங்களிலும் அதற்கான குழு அமைக்கப்படவில்லை.
விளக்கம் அளிக்க வேண்டும்
எனவே தலைமை ஆசிரியர் பீம்குமாரை வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யவேண்டும். நாங்கள் ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். இந்த மனு தொடர்பாக கல்வித்துறை விளக்கம் அளிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர்கள் சார்பில், வக்கீல் ஜி.சந்திரன் ஆஜரானார்.

No comments:

Post a Comment