Labels

rp

Blogging Tips 2017

மாணவர் எதிர்காலம் யார் கையில்?தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. இது உண்மையா? உண்மை போன்ற தோற்றமா? எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வை சுமார் 8.43 லட்சம் பேர் எழுதினர். 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் முறைகேடுகளைக் கண்காணிக்க பறக்கும் படைகள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்கள் துண்டுச்சீட்டு வைத்திருத்தல், பார்த்து எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை தேர்வு எழுத முடியாது. இதுதவிர, ஆள் மாறாட்டத்தைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

"கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா?' என்பார்கள். அதுபோல எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி தவறுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவரை கண்டும் காணாமலும் நடந்தவையெல்லாம் இப்போது கண் எதிரிலேயே நடக்க ஆரம்பித்து விட்டன.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில பெரிய தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை உருவாக்கி கல்வி வணிகத்தைச் சிறப்பாகச் செய்து வருவதன் ரகசியம் இப்போது அம்பலமாகியிருக்கிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் தரும் பணத்துக்கும், தங்கக் காசுகளுக்கும் கல்வித் துறையும், ஆசிரிய சமுதாயமும் சோரம் போவது பெரும் சோகமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் "பிளஸ் 2' கணிதத் தேர்வின்போது செல்லிடப்பேசி மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) சக ஆசிரியர்களுக்கு அனுப்பி விடையைப் பெற்று மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்களைப் பறக்கும் படையினர் கையும், களவுமாகப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண், 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது வழக்கம். இதற்காக சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு முறைகேடாக உதவுவதாக பரவலாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அதே பள்ளி ஆசிரியரைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது, தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தடை என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இவ்வளவு விதிகளும் இந்தப் பள்ளியில் மீறப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஓர் ஆசிரியை உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டக் கல்வி அலுவலர் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது கல்வித் துறைக்கும், ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாபெரும் இழுக்காகும்.

இதேபோன்ற புகார் கடந்த ஆண்டும் எழுந்தது. சில அரசுப் பள்ளி ஆசிரியர்களும், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் புகார் எழுந்தபோது கல்வி அலுவலர் மறுத்தார்.

இந்நிகழ்வு மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது. மேலும், வினாத்தாள் வெளியானதால் பிளஸ் 2 கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மற்றப் பாடத் தேர்வுகள் மட்டும் ஒழுங்காக நடந்திருக்குமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 1,500 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒசூர் கல்வி மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் அளித்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இப்போது புகார் கூறப்பட்டுள்ள 2 ஆசிரியர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

அப்படியிருக்கும்போது அவர்கள் எவ்வாறு தேர்வுக் கண்காணிப்புப் பணியில் இடம்பெற்றார்கள் என்பது பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். இதுபற்றி விசாரணை செய்து கல்வித் துறைக்குச் சமர்ப்பித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலக ஆணை ஏதும் இல்லாமல் ஆசிரியர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் எப்படி ஈடுபட முடியும்? அதே பள்ளியின் கணித ஆசிரியர், பள்ளி நிர்வாகம், கல்வித் துறையின் அனுமதியின்றி தேர்வுப் பணியைக் கண்காணிக்க முடியுமா? அப்படியே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டாலும் இப்படிப்பட்ட மாபெரும் தவறுகள் செய்யக் காரணம் வேண்டுமல்லவா?

அரசுப் பள்ளி ஆசிரியர்களில் சிலர் இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் தேர்வுக் கண்காணிப்பாளர்களாகச் செல்ல ஆர்வம் காட்டுவதாகவும், இதற்காக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ள சிலரது ஆதரவுடன் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்குப் பணியாற்ற ஆணை பெறுவதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக இந்த ஆசிரியர்களுக்குப் பெருந்தொகை அன்பளிப்பாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய ஒசூர் தனியார் பள்ளி, பொதுத் தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இடம் பிடித்து வருகிறது. இதனால், பெற்றோர் கூடுதல் பணம் கொடுத்து அப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால், மற்ற தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளால் கல்வி வணிகமாகிப் போனதால் தொழில் போட்டிகளும் பெருகிவிட்டன. மாணவர்கள் வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இதற்கு உழைப்பு மட்டுமே போதாது என்பதால் குறுக்கு வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கல்விச் சந்தை சீரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு ஆங்காங்குள்ள கல்வித் துறையினரும் விலை பேசப்பட்டு துணை போகின்றனர்.

இதனால், மாநிலம் முழுவதிலும் இருந்து, பணம் படைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவம், பொறியியல் கனவுகளோடு இப் பள்ளிகளில் சேர்க்க படை எடுக்கின்றனர். அதற்காக அந்த ஊர்களில் வீடுகள் எடுத்துத் தங்கியிருக்கும் வெளியூர் பெற்றோர்களைக் காணலாம்.

இந்தப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துவிட்டால் எப்படியாவது உயர் கல்விக்குத் தேவையான மதிப்பெண்களைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை வளர்ந்துவிட்டது.

உண்மை, ஒழுக்கம், பண்பாடு எல்லாவற்றையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது எப்படியாவது மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும்; உயர் கல்வி பயின்று மருத்துவராகவும், பொறியாளராகவும் வெளிவர வேண்டும்.

சமச்சீர்க் கல்வி யாருக்கு வேண்டும்? அண்மைப் பள்ளி, பொதுப் பள்ளி பற்றிக் கவலையில்லை. போட்டிகள் மிகுந்த இந்தச் சமுதாயத்தில் எப்படியாவது வெற்றி பெறுவதே பெரும்பாலான பெற்றோரின் நோக்கமாக இருக்கிறது.

இந்த முடிவில்லாத ஓட்டத்தை யாரால் தடுக்க முடியும்? இந்தத் தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் வேண்டுமட்டும் பெருந்தொகை பெற்றுக் கொண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் எவ்வளவு முயன்றாலும் இவர்களோடு போட்டி போட முடியுமா?

இரவு, பகலாகக் கடுமையாக உழைத்துப் படித்து நேர்மையுடன் தேர்வு எழுதும் அந்த மாணவர்கள் இதுபோன்ற மோசடிகளால் அடைவது ஏமாற்றம்தான். இளம் வயதில் ஏற்படும் இந்த ஏமாற்றம் அவர்களை எங்கே கொண்டு போய்விடும் என்பதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வின்போது இந்தச் சர்ச்சை தொடர்கிறது. சில ஆசிரியர்களும், சில கல்வித் துறை அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையே, ஏன்? பணம் பாதாளம் வரை பாய்கிறதா?

கல்வியின் நோக்கமே மனிதர்களை உருவாக்குவதுதான். ஆனால், இப்போது மதிப்பெண்களை உருவாக்குவது என்று ஆகிவிட்டது. இந்தத் தேர்வு முறையினை மாற்றியமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் காலம் காலமாக கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். யார் செவியிலும் விழவில்லை. இந்தப் பூனைக்கு மணிகட்டுவது யார்?

இந்த மனப்பாடக் கல்வி நல்ல மனிதர்களை உருவாக்காமல் நகல் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. சிந்திக்கும் அறிவையே மழுங்கடித்து விடுகிறது. இவர்கள் படைப்பாளிகளாக மாறாமல் படிப்பாளிகளாகவே மாறிவிட்டனர்.

இதனால்தான் நம் மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். நம் நாட்டில் உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்கள் உருவாகாமல் போனதற்குக் காரணமும் இதுதான்.

"சிந்தனை செய்ய ஆரம்பிப்பது மிகவும் சுலபமான காரியம் அல்ல; ஆனால் மனிதன் ஒருமுறை சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், பிறகு அவன் சிந்திக்கும் பழக்கத்தைக் கைவிடமாட்டான்; மாணவன் உலகத்தையும், இயற்கையையும், பூமியின் மேல் உள்ள பல பொருள்களையும் ஊடுருவிப் பார்த்துக் கவனித்து பிறகு தனக்குத் தானே சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்...'' என்று கல்வியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் ரூசோ கூறுகிறார்.

மனிதர்களை மட்டுமல்ல, மாணவர்களையும், சிந்திக்கவிடாமல் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளைத் திணிக்கும் போக்கே எங்கும் தொடர்கிறது. இதனைக் கல்வியாளர்களும், உளவியல் வல்லுநர்களும் எதிர்க்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பாடங்களைக் கற்கும் போதுதான் அவர்களைச் சிந்திக்கச் செய்ய முடியும் என்பது அவர்கள் கருத்து.

"நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் முடிவு செய்யப்படுகிறது...'' என்று கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இந்த மாணவர்களின் தலைவிதி எங்கே, யாரால் முடிவு செய்யப்படுகிறது என்பதுதான் தெரிய வேண்டும்

No comments:

Post a Comment


web stats

web stats