Labels

rp

Blogging Tips 2017

இன்றைய அரசுப் பள்ளிகளில் - குறிப்பாக தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் என்னதான் நடக்கிறது? SSAதிட்ட நடைமுறை சிக்கல் ஓர் அலசல்

• பள்ளிகளைக் கண்காணிக்க அதிகாரிகளின் படிநிலைத் தவிர, ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு, அன்னையர் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் எனப் பல ‘சனநாயக அமைப்புகள்’ உள்ளன. பள்ளி மேலாண்மைக் குழு என்பது பெற்றோர் ஆசிரியர் கழகப் பெண் உறுப்பினர் (தலைவர்), மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் (துணைத் தலைவர்), தலைமை ஆசிரியர் (செயலர்), உதவி ஆசிரியர், பெற்றோர்கள் 75%, அதில் பெண்கள் 50% வார்டு உறுப்பினர், தன்னார்வலர், கல்வியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர் முதலிய 20 உறுப்பினர்களைக் கொண்டது.

பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், செயல்படுத்த வழிகாட்டல் முதலியன இக்குழுவின் முக்கியப் பணிகள். இக்குழு மாதம் ஒரு முறை கூட்டப்பட வேண்டும். இக்கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் கூட்டுவதோடு கூட்ட நிகழ்வு மற்றும் கலந்து கொண்டோர் வருகை பதிவேடு முதலியவற்றைப் பராமரிப்பதும், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்திற்கு இதன் நகலை அனுப்பிவைப்பதும் தலைமை ஆசிரியர் கடமையாகும்.
கிராமக் கல்விக் குழு என்பது 20 பேர் கொண்ட இன்னொரு குழுவாகும். பள்ளி உள்ளடங்கிய ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர் போன்றோருள் ஒருவர் தலைவராகவும், பள்ளித் தலைமை ஆசிரியர் செயலாளராகவும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், சுய உதவிக்குழு உறுப்பினர்(பெண்), பெற்றோர்கள், அங்கன்வாடிப் பணியாளர், அரசுசாரா தொண்டு நிறுவன உறுப்பினர், கல்வியாளர், ஆசிரியர் பிரதிநிதி, கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர் (தாழ்த்தப்பட்டோர்), மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவன பொறுப்பாளர், இளைஞர் மன்ற நிர்வாகிகள் முதலியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம் பெறுவர்.
இக்குழுவின் முக்கியப் பணி, அனைவருக்கும் கல்வி இயக்கம் வழங்குகிற பள்ளி மானியம் பராமரிப்பு மானியம், புதிய வகுப்பறை, கழிப்பறை, சுற்றுச்சுவர், சாய்தளம் முதலியன கட்டுவதற்கான நிதி ஆகியன சரியாகச் செலவழிக்கப்படுகிறதா? எனக் கண்காணிப்பதாகும். பள்ளிக்கு வழங்கப்படும் நிதியை இக்குழுவின் தலைவர் மற்றும் செயலராகிய தலைமை ஆசிரியர் ஆகிய இருவர் கூட்டாகத் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பள்ளிக்குத் தேவையான செலவுகளைச் செய்ய தீர்மானம் நிறைவேற்றி காசோலையில் தலைவர், செயலர் கையெழுத்திட்டுப் பணத்தை எடுத்துச் செலவழிக்க வேண்டும். கிராமக் கல்விக் குழுவையும் மாதம் ஒருமுறை கட்டாயம் கூட்ட வேண்டும். இக்குழுவும் பள்ளி மேலாண்மைக் குழுவும் ஒரே நாளில் கூட்டப்படக் கூடாது. இக்கூட்டத்தைக் கூட்டுவதும் கூட்டப் பதிவேட்டைப் பராமரிப்பதும் பள்ளித் தலைமை ஆசிரியரின் பொறுப்பு.
இம்மாதிரியான சனநாயகத் தன்மை வாய்ந்த குழுக்கள் வரவேற்கத்தக்கவைதானே? என்று சிலர் கேட்கலாம். உண்மையில் நிலப்பிரபுத்துவக் கூறுகளை ஆழமாகக் கொண்ட முதலாளித்துவ சமுதாயத்தில் வடிவ அளவில் இத்தகைய குழுக்களை அறிமுகப்படுத்துவது வெறும் சடங்குத் தனமானது; அதிகார வர்க்கத்திற்கு இது ஒரு சனநாயக முகமூடியாகப் பயன்படும், அவ்வளவுதான்! நடைமுறையில் எந்த நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தாது. தலைமையாசிரியருக்கும் இதுவும் ஒரு கூடுதல் சுமையே.
இது கூட்டப்படவில்லையென்றால் உயரதிகாரிகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அனைவருக்கும் செய்தி சொல்லிவிட்டு பள்ளியில் காத்திருப்பார். பெரும்பாலான கூட்டங்களுக்கு யாரும் வருவதில்லை. வரவேண்டிய தார்மீகக் கடமையுள்ள அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் இக்கூட்டத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. (விதிவிலக்குகள் உண்டு.) அவரவர் சார்ந்த கட்சிப்பணி அல்லது காண்ட்ராக்ட் பணியில் தொடங்கி அவரவர் சொந்தத் தொழிலைப் பார்க்கச் சென்றுவிடுவர். மேலும், தாழ்த்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் பள்ளிகளில் படிப்பார்களேயானால், தலைவர் பிற்படுத்தப்பட்டோராக இருப்பின் அப்பள்ளிகளைக் கண்டுகொள்ளவே மாட்டார். அப்பள்ளி இருப்பதையே அவர்கள் தொந்தரவாகக் கருதுவர்.
பொதுமக்களாகிய குழந்தைகளின் பெற்றோர் மிகவும் பின்தங்கிய பொருளியல் சூழலில் அன்றைக்குக் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு பள்ளியின் கூட்டங்களுக்கு வர நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பர்.
வேலையில்லாக் காலங்களில் நேரங் கிடைத்த போதும் பள்ளிகளில் சென்று எதைச் சொல்வது என்று தயங்குகிற பெற்றோர்களே அதிகம். இவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள். முதல் தலைமுறையாகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியவர்கள். தலைமை ஆசிரியரோ கூட்டம் நடந்ததாகக் காட்ட, தானே வீடுவீடாகச் சென்று தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி வருவார். (12 பேர் கையெழுத்து குறைந்தபட்சம் வேண்டுமே!). சிலர் அலட்டிகாமல் தாமே வலதுகையால் சில கையெழுத்துகளையும், இடது கையால் சில கையெழுத்துகளையும் போட்டுக் கூட்டத்தை முடித்துவிடுவர். ஆனால் இவற்றையெல்லாம் செய்துமுடிக்க ஆகும் நேரம் குழந்தைகளுக்கும் கற்பிக்கப்படும் நேரத்திலிருந்து களவாடப்படுகிறதே!
• பள்ளிக்குக் கழிவறை, புதிய வகுப்பறைக் கட்டடம் முதலியவற்றிற்குப் பணம் ஒதுக்கியிருந்தால், அதற்குக் கிராமக் கல்விக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது, காசோலையில் கையெழுத்து வாங்க அவ்வப்போது தலைவரைத் தேடுவது (ஒரே நேரத்தில் மொத்தமாகப் பணம் எடுக்க முடியாது), குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டடப் பணி முடிக்க வேண்டி கொத்தனா, சித்தாளைத் தேடுவது, அவர்களின் வேலையைக் கண்காணிப்பது, கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, அவற்றுக்கான பில் தொகுப்பது, பல்வேறு பணி நிலைகளைப் படம் எடுப்பது, வங்கிக் கணக்குப் புத்தகம், காசோலைப் புத்தகம், ரொக்கப் புத்தகம், செலவினம் வாரியாகப் பேரேடு, பற்றுச் சீட்டுகள், கோப்புகள் முதலியனவற்றைப் பராமரித்தல் ஆகிய பணிகளைத் தலைமையாசிரியர் செய்தல் வேண்டும். இவற்றோடு பள்ளி மற்றும் பராமரிப்பு மானியச் செலவினப் பதிவேடுகளைப் பராமரித்தல் வேண்டும். இவற்றை ஆண்டுக்கு ஒருமுறை வட்டார வளமையத்தில் கொண்டு வந்து சரிபார்த்துச் செல்ல வேண்டும். மாநிலத்திலிருந்து வரும் தணிக்கைக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
• அன்னையர் குழு என்பது 6 பேர் கொண்ட பெண்கள் குழு. இது பள்ளியின் கழிப்பறை, மதிய உணவு முதலியவற்றைப் பார்வையிடும். இவர்களுக்கான பார்வையாளர் பதிவேட்டையும் தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும்.
பெரும்பாலான கிராமங்களில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையே இருபது, பதினைந்து, பத்து, எட்டு, ஐந்து என்று இருக்கும்போது இவர்களைக் கண்காணிக்க 46 பேர் கொண்ட இத்தனை குழுக்கள் அவசியமா? ஒரே குழு போதாது என்றால் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இக்குழுக்களை அமைத்துக் கொள்ளக் கூடாதா?
• நூற்றுக்கும் மேற்பட்ட பதிவேடுகளை ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். பாடம் நடத்தும் நேரத்தைவிட பதிவேடுகள் பூர்த்தி செய்யும் நேரமே அதிகம்.
• ‘அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார அளவில், குறுவட்டார அளவில் நடத்தும் பல்வேறு பயிற்சிகளில் (குறைந்தபட்சம் 10 + 10 ) ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். பயிற்சி என்பது தேவையை ஒட்டி உண்மையிலேயே ஆசிரியரிடமிருந்து கோரிக்கை வந்தால் வழங்குவதில் தவறில்லை. புதிதாகப் பணியில் சேர்ந்தவர்க்கு வேண்டுமானால் கட்டாயம் வழங்கலாம். ஆனால், ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவு செய்தே ஆக வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும் அரைத்த மாவையே அரைப்பதுபோல் தன்சுத்தம், பல்சுத்தம், உடல்நலம், கை கழுவுதல், உடற்பயிற்சி, கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வாசித்தல், எழுதுவதில் மேம்பாடு; போன்ற தலைப்புகளில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வர்.
• மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், மேற்பார்வையாளர் முதலியோர் கூட்டும் கூட்டங்களில் கலந்துகொண்டு அவர்களின் வழிகாட்டுதல்களைத் தலைமை ஆசிரியர்கள் பெறவேண்டும்! இம்மாதிரியான கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை என்ற கணக்குக் கிடையாது!

No comments:

Post a comment