Labels

rp

Blogging Tips 2017

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இலவசப் பேருந்துகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இலவசமாக இயக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், என். கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு வேறொரு மனு மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தது. அந்த வழக்கில் ஆஜரான வழக்குரைஞர்கள் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகளை இலவசமாக இயக்க வேண்டும் எனக் கோரினர்.

 நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்ததாவது: கடந்த சில நாள்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சென்னை சென்றிருந்தேன். அங்கிருந்து மதுரை வருவதற்கு தனியார் பேருந்துகளில் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தனர். சென்னையில் வெள்ளம் காரணமாக வெளி உலகத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சீராக இல்லை. சென்னையில் உள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஊருக்குச் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து சொந்த ஊருக்குச் செல்ல வழியில்லாமல் தவிக்கின்றனர்.
 இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் சில தனியார் பேருந்துகள் அதிகளவில் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் சிலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு நிலைமை சீராகும் வரை சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இலவசமாக இயக்க நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 அப்போது கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் செல்லப்பாண்டியன் தெரிவித்ததாவது: பேரிடர் மீட்புப் பணிகள் தொடர்பான அவசரக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது. கூட்டத்தில் பேருந்துகளை இலவசமாக இயக்குவது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டது. அரசும் அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டது. நிலைமை சீராகும் வரை பேருந்துகளை இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
 இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வெள்ளிக்கிழமை (டிச.4) மாலைக்குள் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளையும் இலவசமாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

No comments:

Post a comment