Labels

rp

Blogging Tips 2017

சட்டசபையில் 110வது விதியின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சலுகை அளித்து ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110 வது விதியின் கீழ்  அறிக்கை ஒன்றை வாசித்தார் அதில் கூறி இருப்பதாவது:-
மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஓர் அங்கமாக அனைவரும் ஏற்பதற்கும், வளர்ச்சியில்  மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும்
, அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.  எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 1993-ஆம் ஆண்டிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான தனி இயக்ககத்தை ஏற்படுத்தியதோடு மாற்றுத் திறனாளிகளுக்கு என, விரிவான மாநிலக் கொள்கையையும் 1994-ஆம் ஆண்டே நான் வெளியிட்டேன்.
2011-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கிட பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. 

6 வயதுக்குட்பட்ட பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் 5 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த நிலையில், மேலும் 20 மாவட்டங்களில் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  இந்த ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு குழந்தைகளை அழைத்து வரும் பாதுகாவலர்களுக்கு கட்டணமின்றி, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் சலுகை வழங்கியதுடன்   நாளன்றுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயணச் செலவுத் தொகை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. செவித் திறன் பாதிக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சாதாரண காதொலிக் கருவிகளுக்குப் பதிலாக 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன் வாய்ந்த காதொலிக் கருவிகள் வழங்கப்படுகின்றன. பார்வை குறைவுள்ள குழந்தைகள் படிப்பதற்கு எளிதாக படிக்க வகை செய்யும் விதமாக எழுத்துக்களை பெரிதாக்கி பார்க்கக் கூடிய கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. 

12 மாவட்டங்களில் மட்டும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் செயல்பட்டு வந்த தொழிற் பயிற்சி மையங்கள் மேலும் 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்க மத்திய கூட்டுறவு வங்கிகளிலிருந்து பெறப்படும் கடன் தொகைக்கான வட்டியினை அரசே செலுத்துகிறது.  மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பள்ளிகளில் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு மாதமொன்றிற்கு, வழங்கப்பட்டு வரும் உணவு ஊட்டுச் செலவினம்  450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  விடுதியில் தங்காமல் இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.   பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சாதாரண மடக்கு குச்சிகளுக்குப் பதிலாக ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு அவர்களின் இயலா தன்மையின் வகை, பாதிப்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு உள்ளடக்கிய கல்வி வழங்கப்பட்டு வருகிறது.  நாட்டிலேயே முதன் முறையாக மாற்று திறன் கொண்ட, குழந்தைகளுக்கென மாநில ஆதார வள மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 108 நகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக பொது கட்டடங்களில் அவர்களுக்கென தனி கழிப்பிடங்கள் 8 கோடியே 20 லட்சம் ருபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு 500 முதல் 3,500 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த  வாசிப்பாளர் உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டு தோறும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட,

பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 1,000 எண்ணிக்கை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென 32 நகரும் சிகிச்சைப் பிரிவுகள்  தொடங்கப்பட்டுள்ளன.  மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லங்கள் அரசின் நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 11 மாவட்டங்களில் செயல்பட்டு வந்தன.  மேலும்

21 மாவட்டங்களில் இந்த இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அதே போன்று, மன வளர்ச்சிக் குன்றியோருக்கான இல்லங்கள் 21 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நிலையில், மேலும்

11 மாவட்டங்களில் அது போன்ற இல்லங்கள் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதே போன்று, பசுமை வீடுகள் திட்டத்திலும், தொகுப்பு வீடுகள் திட்டத்திலும் 3 சதவீதம் ஓதுக்கீடு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment