Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

கல்வித் துறையின் முரண்பாடான உத்தரவால் மாணவர்கள் அவதி

பள்ளி வேலை நாள்கள் தொடர்பான கல்வித் துறையின் முரண்பாடான உத்தரவால், மாணவர்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலை பள்ளிகளுக்கும்,
12-ஆம் வகுப்பு வரையிலான மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மொத்த வேலை நாள்கள் 210 ஆகும்.

அதேபோல, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளுக்கு மொத்த வேலை நாள்கள் 220 ஆகும்.

இவ்வாறு, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு, இருவேறு உத்தரவுகள் அமலில் உள்ளன.
தற்போது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. குறிப்பாக, கடந்த 108 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலூரில் 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் எவரும் வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அந்த அளவுக்கு, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கடந்த 22-ஆம் தேதியுடன் பள்ளி வேலை நாள்கள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது.
ஆனால் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (ஏப்.30) வரை வேலை நாள்களாக இருப்பதால், அதுவரை பள்ளிகள் இயங்கும்.
பள்ளி வேலை நாள்கள் தொடர்பாக ஏன் முரண்பாடு நிலவுகிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்த கடுமையான வெயிலை எப்படித் தாங்குவார்கள் என அவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது போலவே தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறையை முன்கூட்டியே அளிக்கலாம்.
வேலை நாள்களை குறைக்காமல், ஜூன் முதல் ஏப்ரல் வரை சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறந்து அதனை ஈடுகட்டலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
வரும் கல்வியாண்டு முதல் மாணவர்களின் நலனைக் கருதி, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே நேரத்தில் விடுமுறை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment